Tamilnadu

தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது தாக்குதல்; கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க, பா.ஜ.க அராஜகம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, உரிய அனுமதி பெற்று கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காரில் வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிட்டு அவர் காரில் திரும்பியபோது, அங்குக் கூடியிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் கார்த்திகேய சேனாபதி காரை தடுத்து நிறுத்தி ஏன் இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பி அவரின் கார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், தலையை வெட்டி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து அராஜகமாக நடந்துகொண்டனர்.

பின்னர் இந்த சம்பவத்தைக் கண்டித்து தி.மு.கவினர் பேரணியாக நடந்து சென்று செல்வபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளரை ஏன் அனுமதிக்கவில்லை என போலிசாரிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளைப் பார்த்து வருகிறோம். செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த போது அ.தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.கவினர் காரை தடுத்து நிறுத்தித் தாக்க முயற்சித்தனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். சம்பவம் நடந்தபோது காவல் ஆய்வாளர் மற்றும் உதவு ஆய்வாளர் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினரின் இந்த அராஜக நடவடிக்கையால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். தொடர்ந்து, ஐ.ஜி., காவல்துறை ஆணையரிடமும் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளேன். தோற்று போவோம் என்ற அச்சத்தினால் அ.தி.மு.க, பா.ஜ.கவினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “வாக்காளர்களுக்கு பாஜகவினர் டோக்கன் வினியோகம்; புகாரளித்தும் நடவடிக்கை இல்லை”: காங். வேட்பாளர் போராட்டம்!