Tamilnadu
“பா.ஜ.கவின் கொள்ளைப்புற அரசாங்கத்தை நடத்தினார் பழனிசாமி” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி !
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நாள் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியில், செய்திப்பிரிவுத் தலைவர் ப.திருமாவேலன் அவர்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
பகுதி - 03
கேள்வி : கடந்த காலத்தில் சென்னை மேயராக - உள்ளாட்சித் துறை அமைச்சராக - தொழில் துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்துள்ளீர்கள். இந்த அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள். உங்கள் நிர்வாகம் எப்படி இருக்கும்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : தூய்மையான நிர்வாகம் - உண்மையான நிர்வாகம் - வெளிப்படையான நிர்வாகம் என்பது என்னுடைய இலக்காக இருக்கும்! இதுவரைக்கும் அப்படித்தான் இருந்தது. நீங்கள் தலைநகர் சென்னையில் எங்கே சுற்றினாலும் நான் கட்டியபாலங்களில் பயணம் செய்யாமல் இருக்க முடியாது.
ஒன்றல்ல, ஒன்பது பெரிய பாலங்கள், 49 குறும்பாலங்களும் கட்டியவன் நான். அந்த ஒன்பது பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் கட்டி முடித்தேன். திட்டமிட்ட தொகையை விடக் குறைவாகச் செலவழித்து மீதிப்பணத்தை மாநகராட்சியிடம் கொடுத்தவன் நான்!
* தூய்மையான சென்னையை உருவாக்கினோம். சிங்காரச் சென்னையை உருவாக்கினோம்.
* உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
* 630 கோடியில் இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்.
* 1400 கோடியில் வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம்.
* 1928 கோடியில் ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்.
* 1000 கோடியில் மேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம்.
* நெம்மேலியில் 533 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் - இவை அனைத்தும் எனது பெயரைச் சொல்லும்!
* தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கினேன். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் 4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!
* 2032 கோடியில் சென்னையிலும்,
* 2497 கோடியில் மதுரையிலும், 3187 கோடி கோவையிலும் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் அமைத்தவன் நான்!
* வேலை நியமனத் தடை சட்டத்தை நீக்கி உள்ளாட்சித் துறையில் மட்டும் 25 ஆயிரம் புதிய பணிநியமனங்கள்!
* வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் 1.22 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - இவை அனைத்தையும் செய்து கொடுத்தவன் இந்த ஸ்டாலின்!
* சென்னை மாநகர மக்களுக்கு மிகப்பெரியவசதியாகத் திட்டமிடப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம். மெர்ரோ ரயில் திட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் 2006ம் ஆண்டில் திட்டமிட்டார்கள். ஜப்பான்சென்று அதற்கான நிதியை பெற்று வந்தவன் நான். ஆனால் இன்றைக்கு மெட்ரோ ரயிலில்பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கிறார்கள் என்றால் அதற்கு கலைஞரும் நானும் திமுகவும் தான் காரணம்என்பதை சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.!
கேள்வி : அதிமுக அரசாங்கத்தின் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் மீது நீங்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம் என்ன?
தலைவர் மு.க.ஸ்டாலின் : இதுவரை நடந்தது ஆட்சியே அல்ல! வெறும் காட்சி அவ்வளவு தான்! சிலரது சுயநலத்துக்காக ஆட்டுவிக்கப்பட்ட பொம்மையாக முதல்வர் பழனிசாமி இருந்தார். ஜெயலலிதா இறந்ததால், சசிகலா சிறைக்குப் போனதால், பன்னீர்செல்வம் தனியாகப் போனதால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் பழனிசாமி. அதனால் அவருக்கு எந்த விதமான ஆளுமைத் திறனும் இல்லை!
மத்திய அரசு சொன்னது அனைத்துக்கும் தலையாட்டிக் கொண்டு பா.ஜ.கவின் கொள்ளைப்புற அரசாங்கத்தை நடத்தினார் பழனிசாமி. பா.ஜ.கவானது தமிழினத் துரோகத் திட்டங்களை தடையின்றி அமல்படுத்தியது. எனவே, இதுவரை பார்த்ததை ஒரு அரசாங்கமாகவே என்னால் சொல்ல முடியாது!
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அமைச்சர்களும் இல்லை. அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகளும் இல்லை. இந்த ஆட்சி அதிகாரத்தில் இணைப்பானது அரசு ஊழியர்களிடமும் இல்லை. எனவே, மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன் அடையாளம் தான் முதலமைச்சருக்கு தெரியாமல் மந்திரிகள் எல்லோரும் உளறிக் கொண்டு இருந்தார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகமும் நிதி நிர்வாகமும் மொத்தமாக சிதைந்துவிட்டது.
கடன் வாங்கி கடன் வாங்கி டெண்டர் விட்டு, மூன்று அமைச்சர்கள் முழுமையாக சம்பாதித்துக் கொண்டு இருந்தார்கள். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, குடியுரிமை சட்டம், வேளாண் சட்டம், மின்சார சட்டம், ஜி.எஸ்.டி., என அனைத்தும் சேர்ந்து தமிழ்நாடு இதுவரை காப்பாற்றி வந்த வளமான கட்டமைப்பைச் சிதைத்துவிட்டது.
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் இந்தி மயமானது மட்டுமல்ல, வடமாநில மயமாகி விட்டது. இதன் உச்சமாக தமிழக அரசுப்பணிக்குள் வட மாநிலத்தவரை திட்டமிட்டு நுழைத்து விட்டது அதிமுக அரசு. அதாவது புதிய திட்டமிடுதல்களும் இல்லை. பழைய கட்டமைப்புகளை சிதைப்பதும் அதிகமாக நடந்தது. அதனால் தான் ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தை பின்நோக்கி போக வைத்து விட்டார்கள் என்று நான் சொல்லி வருகிறேன். அதனால் தான் இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, நமது சுயமரியாதையை மீட்கும் தேர்தல் என்கிறேன்!
கேள்வி : இந்தப் பேரழிவை உங்களால் சரி செய்ய முடியுமா?
தலைவர் மு.க.ஸ்டாலின் : நிச்சயமாக முடியும்! நான் உறுதியேற்கிறேன்!
நான் செய்வேன். செய்வது அனைத்தையும் மக்களுக்கு வரிசையாகச் சொல்வேன் என்றும் சொல்லி இருக்கிறேன்!
சொன்னதைச் செய்தவர் கலைஞர்!
நாம் கலைஞரின் மகன்! நிச்சயம் செய்வேன்!
ஒரு வரிக் கேள்விகள்!
கேள்வி : உங்களுக்கு எதிரி யார்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகள் அல்ல! கழகத்தின் கொள்கை எதிரிகள் என் எதிரிகள்.
கேள்வி : எப்படி உங்களால் இவ்வளவு பயணம் செய்ய முடிகிறது?
தலைவர் மு.க.ஸ்டாலின் : கலைஞர் அவர்கள் தான் சொன்னார்கள், நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்!
கேள்வி : முதல் கையெழுத்து?
தலைவர் மு.க.ஸ்டாலின் : 100 நாளில் பிரச்னையைத் தீர்க்கும் துறையை உருவாக்கவே முதல் கையெழுத்து!
கேள்வி : டெல்லியோடு மோதுவீர்களா?
தலைவர் மு.க.ஸ்டாலின் : வாதாடுவேன்!
கேள்வி : எதை வைத்து 200 தொகுதிகள் என்கிறீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : மக்களின் முகங்களில் தெரிகிறது!
கேள்வி : அன்றைய தினம் கலைஞர் நினைவிடத்தில் என்ன சொல்வீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : உங்கள் ஸ்டாலின் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான் என்று சொல்வேன்!
கேள்வி : பக்கத்தில் இருக்கிறதே அண்ணா நினைவிடம்? அங்கே 1967 இல் நீங்கள் பெற்ற வெற்றிக்குச் சமம் அண்ணா என்பேன்! என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!