Tamilnadu
“அரசு வேலை வேணும்னா ரூ.8 லட்சம் கொடு” - அமைச்சர் பெயரால் ஏப்பம் விட்ட அ.தி.மு.க நகரச் செயலாளர்கள்!
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 8 லட்சம் பணம் பெற்று, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் மீது புகார் திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில கவுரவ தலைவர் ராஜவேலு என்பவர் திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் மணி என்பவர் தனது மகன் தினேஷ் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தர முயற்சி எடுத்து வந்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியைச் சேர்ந்த பழனி என்பவர் மூலம் அ.தி.மு.க நகரச்செயலாளர்கள் சரவணன் மற்றும் சதாசிவம் ஆகிய 2 பேரும் மணிக்கு அறிமுகமாகியுள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலிடம் சிபாரிசு செய்து மணியின் மகன் தினேஷூக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறையில் காலியாக உள்ள எழுத்தர் வேலையை வாங்கி தருவதாகவும், அதற்காக ரூ.8 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அ.தி.மு.க நகரச்செயலாளர் சரவணனிடம் ரூ.2 லட்சமும், அக்டோபர் மாதம் அ.தி.மு.க நகரச்செயலாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணனிடம் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார் மணி.
பணத்தை பெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் இதுவரை அரசு வேலை வாங்கித் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதில் ரூ.5.90 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு பாக்கியுள்ள ரூ.2.10 லட்சத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்தனர்.
பணத்தை மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகிகளிடம் இதுதொடர்பாக, அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கேட்டபோது, பாக்கி பணத்தை தர முடியாது என்றும், வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்றும் மிரட்டுகின்றனர்.
அமைச்சர் நிலோபர் கபீலின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், பாக்கியுள்ள ரூ.2.10 லட்சம் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளும், அ.தி.மு.க-வினர் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளைஞர்களிடமிருந்து பணம் பறித்ததாக அவ்வப்போது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆட்சி முடிவடையும் நேரத்திலும் அ.தி.மு.கவினர் பணம் பறிப்பில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!