Tamilnadu
போக்குவரத்து துறையில் ஊழல்: பணத்துக்காக பழைய உதிரி பாகம் வாங்கி மக்கள் உயிரோடு விளையாடும் அ.தி.மு.க அரசு!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 20 மண்டலங்கள், 330 பேருந்து பணிமனை மூலம் 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் இயங்கி வருகிறது. இவற்றில் தினமும் 2 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர்கள், டெக்னீசியன், அலுவலர்கள் என்று மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு பஸ் வைத்திருக்கும் தனியார் நிறுவன உரிமையாளர், அடுத்த 5 வருடத்தில் 10 பஸ்களை வாங்கி லாபத்தில் இயக்குகிறார். 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டும் அமைச்சர், அதிகாரிகளால் பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஊழல், பராமரிப்பில் லட்சியம், முறைகேடு என்பதை தவிர அ.தி.மு.க அரசிடம் இருந்து வேறு எதையும் பார்க்க முடியாது. இதனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
டீசலில் கொள்ளையால் கொழிக்கும் அதிகார வர்க்கம் அரசு பஸ்களுக்கு அந்தந்த டெப்போக்களில் டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தின் 650க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.5 கி.மீட்டர் முதல் 6 கி.மீட்டர் வரை மைலேஜ் தர வேண்டும் என்று டிரைவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். காலாவதி பஸ்களால், மைலேஜ் தர முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர்.
அரசு பஸ்களில் டேங்கில் முழு கொள்ளளவான 165 முதல் 200 லிட்டர் டீசல் நிரப்புவதில்லை. பஸ் இயக்கப்படும் தூரத்தினை கணக்கிட்டு, அந்த அளவுக்கு டீசல் நிரப்பப்படுகிறது. இதனால் பஸ் டெப்போக்களில் உள்ள டீசல் கையிருப்பு மற்றும் நிர்வாகம் கணக்கு காட்டும் டீசலின் அளவிற்கும் இடையில் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.
அதன்படி வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 10 டெப்போக்களில், ஒவ்வொரு மாதமும் சுமார் 24 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு நடக்கிறது. இதனால் மாதந்தோறும் சுமார் ரூ 20 லட்சம் மதிப்புள்ள டீசல் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இதில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பங்கு போவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தனியார் முதலாளிகளுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின்கீழ், 3,200 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் நகர்ப்புற பகுதிகளில் தாழ்தள டவுன் பஸ், சாதாரண டவுன் பஸ் என இரு வகையான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், இங்குள்ள அதிகாரிகள், தனியார் பஸ் முதலாளிகளுடன் கை கோர்த்துக்கொண்டு, தாழ்தள சொகுசு பேருந்துகளை அதிகளவில் இயக்குகின்றனர். இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.11. ஆனால் தனியார் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. இதனால் பொதுமக்கள் அரசு பஸ்சை தவிர்த்து தனியார் பஸ்களுக்கு செல்கின்றனர். இதனால் 3200 பஸ்கள் ஓடியும். இந்த மண்டலத்தில் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்காக அரசு அதிகாரிகளுக்கு பண்ணை ஹவுஸ்சில் வைத்து பணம் கைமாறுகிறது.
பணத்துக்காக மக்களின் உயிருடன் விளையாடும் அமைச்சர்
லேலேண்ட் கம்பெனியின் பிஎஸ்4 ரக பஸ்களை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அரசு பஸ்களின் சேஸ் துவங்கி பாடி கட்டி டிப்போக்களிடம் ஒப்படைப்பு செய்வது வரை பஸ் ஒன்றிற்கு ரூ.25 லட்சம் செலவாகும். இதில் சேஸ் வாங்குவதில் ஒவ்வொரு பஸ்சிற்கும் ரூ.2.50 லட்சம் கமிஷன் பெறப்படுகிறது. சேலம், கோவை, மதுரை பசுமலை உள்பட பல டிப்போக்களில் பாடி கட்டுமான பிரிவுகள் உள்ளன. ஆனால் அதிமுக ஆட்சியில தனியாரிடம் பஸ் பாடி கட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
பாடி கட்டுமானத்தில் பஸ் ஒன்றிற்கு ரூ.2.50 லட்சம் வரை கமிஷன் பெறப்படுகிறது. ஒரு பஸ் கொள்முதலாகி டிப்போ வரும் வரை, பஸ்சுக்கு ரூ.5 லட்சம் வரை கமிஷன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இப்படி தரமற்ற முறையில் கட்டப்படும் பஸ் பாடிகள் சில மாதங்கள், ஆண்டுகளில் கலகலத்து போய் டெப்போ மூலையில் காட்சி பொருளாக மாறிவிடுகிறது.
உதிரிபாகங்களில் கமிஷன்
டயர், உதிரிபாகங்கள், பேட்டரி கொள்முதலில் அபரிமிதமான கமிஷன் பெறப்படுகிறது. அதிக கமிஷன் தரும் டயர் நிறுவனங்களிடம் இருந்து டயர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் சமீபகாலமாக வரும் டயர்கள் தரமற்றவையாக உள்ளது. தரமில்லாத போலி பேட்டரிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன். ஒவ்வொரு டிப்போக்களிலும் ஆளுங்கட்சியை சேர்ந்த 10 முதல் 20 நபர்கள் எந்த வேலையும் செய்யாமல், ‘‘ஓடி’’ என்ற பெயரில் சும்மாவே இருந்து சம்பளம் பெறுவதால் போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. மேலும் ஆளுங்கட்சியில் புரோக்கர் வேலை செய்து, பலரிடம் டிப்போ, வண்டி மாற்றம் என்ற பெயரில் வேலை செய்யாமல் இருப்பதற்கு ரூ.2 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து கழகத்தை சந்தை மடங்களாக மாற்றிவிட்டனர்.
ஜி.எம், எம்.டி பதவிக்கு கிராக்கி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பெரிய பதவிக்கு வர அதிகபட்சமாக 50 ‘எல்’ கொடுப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும். இவ்வாறு பணம் கொடுத்து பதவி வாங்கும் பொது மேலாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தை சுரண்டி சூறையாடி விடுகின்றனர்.
நைட் சர்வீஸ் ‘கட்’
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நகர்ப்புற பகுதிகளில் இரவுநேர பேருந்துகள் இயக்கப்பட்டு, அதன்மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி தரப்படும். இரவு நேரத்தில் பயணிக்கும் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு இந்த ``நைட் சர்வீஸ்’’ பஸ்கள் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது இவை ‘கட்’ செய்யப்பட்டு விட்டது. இதனால், மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில், தனியார் பஸ்கள் வசூல் தட்டி எடுத்து விடுகின்றன.
விடுப்புக்கு லஞ்சம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 320 பணிமனைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக ராஜாவாக வாழ்ந்தவர்கள், ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் தான். இவர்கள் கண்ட்ரோலில், டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்களின் இடமாற்றம் எல்லாம் இன்றைக்கும் நடந்து வருகிறது. ஒவ்வொரு டிரான்ஸ்பருக்கும் காசு கொடுக்கணும் என்ற எழுதப்படாத சட்டத்தை அமல்படுத்திவிட்டனர். இந்த வகையில் மட்டும் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்துள்ளார்கள். சேலம், தர்மபுரி கோட்டங்களில் வினோதமாக மற்றொரு ஊழலும் நடந்து வருகிறது. டிரைவர், கண்டக்டர்கள் லீவு எடுக்க வேண்டும் என்றால், ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிக்கு லஞ்சம் கொடுத்தாக வேண்டும். ஒருநாள் லீவுக்கு ரூ.200 என்ற அடிப்படையில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
மாற்றுப்பணி வழங்குவதில் லஞ்சம்
ஒரு பணிமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க கூடாது. ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு மாற்றுப்பணி வழங்குகின்றனர். இதன்மூலம் மேலாளர்க மாதம்தோறும் பல ஆயிரக்கணக்கான தொகை லஞ்சமாக சுருட்டி உள்ளனர்.
ஆண்டுதோறும் உயிரிழப்பு
பஸ்களை பராமரிக்காமை, தரமற்ற உதிரி பாகங்கள், லஞ்சம் பெற்று போட்ட பஸ் டிரைவர்களால் ஆண்டுதோறும் அரசு பேருந்துகள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகிறது. 2013-14ம் ஆண்டில் 1318 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2014-15ம் ஆண்டில் 1,331 உயிரிப்புகள் நடந்துள்ளது. 2015-16ம் ஆண்டில் 1,460 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் 1,373 உயிரிழப்பு நடந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் 1,247 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2018-19ம் ஆண்டில் 1,159 உயிரிழப்பு, 2019-20ம் ஆண்டில் 834 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதனால், 500 கோடி ரூபாய்களை கமிஷன், கரப்ஷன் மூலம் போக்குவரத்து துறையில் ஊழல் நடந்துள் ளதாக ெதாழிற்சங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
குறைந்த அளவு இயங்கும் சிற்றுந்துகள்
பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளை பிரதானச் சாலைகளுடன் இணைப்பதற்கு வசதியாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 69 வழித்தடங்களில் 150 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் கொரோனாவுக்கு பிறகு குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி :- தினகரன்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?