Tamilnadu
“இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்; நம் தாய்த் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்”: மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (04-04-2021), தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, சென்னையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளின் தொகுப்பு வருமாறு :
அண்ணா நகர்
வரும் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் நம்முடைய அருமை சகோதரர் எம்.கே.மோகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித்தர வேண்டும்.
ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன பணிகளை ஆற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
கொரோனா எனும் கொடிய தொற்றுநோய் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தவுடன் எந்த கட்சியும் செய்யாத, ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. நினைத்துப் பார்க்காத அற்புதமான - ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நான் பெருமையோடு சொல்கிறேன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இப்படி ஒரு கட்சி உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு உதவி செய்திருக்க முடியாது. தி.மு.க.தான் அந்தப் பணியைச் செய்தது.
இந்த அண்ணாநகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மோகன் அவர்கள் தலைமையில் இந்த தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு பணியாற்றுவதில் என்றைக்கும் பின் வாங்காதவராக நம் மோகன் அவர்கள் விளங்கி இருக்கிறார். எனவே அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
இன்றைக்கு இருக்கும் ஆட்சி கொரோனாவைப் பற்றி கவலைப்படுவதில்லை, மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அந்த கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்தவர்கள்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் முதல் கடைக்கோடி அமைச்சர்வரை அத்தனை பேரும் எல்லா துறைகளிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கரப்சன் - கமிஷன் – கலெக்சன். இதுதான் அவர்களது கொள்கை. அந்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மே 2-க்கு பிறகு நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அவ்வாறு வந்ததற்குப் பிறகு உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுக்கப் போகிறோம்.
இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், ஓ.பி.எஸ் கையையும் இ.பி.எஸ். கையையும் பிடித்துத் தூக்கி ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஊழல் கறைபடிந்த கைகளைப்பிடித்துக் கொண்டு பிரதமர் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார்.
நான் கேட்கிறேன், நீட்டைக் கொண்டு வந்தது யார்? உதய் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்? ஜி.எஸ்.டி. சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது யார்? சிஏஏ சட்டத்தைக் கொண்டுவந்து சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது யார்? புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது யார்?
நாட்டு மக்களுக்கும், தமிழர்களுக்கும், விரோதமான இவற்றைக் கொண்டு வந்து, பாஜக தலைமையில் இருக்கும் ஆட்சி கொடுமை செய்து கொண்டிருக்கிறது. எனவே அதை ஆதரிப்பதுதான் இங்கிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வேலை. அவர் ஆதரித்தாலும் பரவாயில்லை சரண்டராகி காலில் விழுந்து கிடக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தேர்தலில் 505 வாக்குறுதிகளைச் சொல்லி இருக்கிறோம். அந்த உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்ற நம்முடைய எம்.கே.மோகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து அவரை வெற்றி பெற வையுங்கள்.
வில்லிவாக்கம்
இந்த வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் வெற்றியழகன் அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய ஆதரவை தர வேண்டும். அதற்காகத்தான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.
நம்முடைய வேட்பாளர் வெற்றியழகனைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பீர்கள். நம்முடைய பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அவர்கள், இந்த இயக்கத்திற்கு துணை நின்றது மட்டுமல்ல, இந்த சமுதாயத்திற்கு அவர் எப்படி எல்லாம் துணை நின்றார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அவர் தலைவர் கலைஞருடன் எந்த அளவிற்கு நட்போடு இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு பேரும் இணை பிரியாத நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தவுடன் நம்முடைய பேராசிரியர் அவர்களும் சோர்வடைந்து விட்டார்கள். உயிருக்கு உயிராக பழகிக் கொண்டிருந்த நண்பனை இழந்து விட்டோம் என்பது அவரைத் தாக்கி விட்டது. அதனால் அவரும் உடல் நலிவுற்று, அவருடைய பணியில் தொய்வு ஏற்பட்டு, அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்குப்பிறகு நம்மை விட்டு மறைந்துவிட்டார்.
எனவே கலைஞர் இறந்த செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில்தான் அவர் உடல் நலிவுற்று மறைந்துவிட்டார். அப்படிப்பட்ட நட்பிற்கு இலக்கணமாக விளங்கியவர்கள் அவர்கள். அவருடைய அருமைப் பேரன்தான் நம்முடைய வேட்பாளர் வெற்றியழகன் அவர்கள்.
அவர் ஒரு நல்ல இளைஞர். படித்த பட்டதாரி. தொழில்நுட்பத்தில் எந்த அளவிற்கு விழிப்போடு இருப்பவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நம்முடைய வேட்பாளரைப் பொறுத்தவரையில் இந்தப் பகுதியில் கல்லூரி ஆரம்பிக்க உறுதியளித்திருக்கிறார். ஆனால் அவரை எதிர்த்து, ஆளுங்கட்சியின் சார்பில் நிற்பவர் எப்படி என்றால் நூறாண்டு கண்ட பள்ளியை கபளீகரம் செய்தவர். அந்தப் பெருமை அவருக்கு உண்டு. இதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்.
இந்த வில்லிவாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக நம்முடைய வெற்றியழகனை தேர்ந்தெடுக்கும்போது, அவர் இந்த தொகுதிக்கு அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றறி தருவார். அவர் சார்பாக நான் சொல்ல விரும்புகிறேன்.
அயன்புரம் மேட்டுத் தெரு - ராஜ் தெரு வழியாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மினி பஸ்; அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி; பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளைச் செப்பனிடவும், தேவையான இடங்களில் புதியதாகக் கட்டித்தரவும் நடவடிக்கையும் எடுக்கப்படும்; பழைய பாதாள சாக்கடை நவீனமுறையில் புதிதாகப் புதுப்பிக்கப்படும். தேவையான இடங்களில் புதிய பாதாள சாக்கடை கட்டித் தரப்படும்; பழைய விளையாட்டுத் திடல்கள் புதுப்பிக்கப்படும்.
புதிய விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்படும்; இரண்டு பெரிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள்; வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்; போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள்; இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவையான இடங்களில் ஜிம் வசதி; சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே இல்லாத இத்தொகுதியில் முதலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு பல அறிவிப்புகளை அவர் சார்பில் சொல்லியிருக்கிறேன். இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். எனவே மீண்டும் சொல்கிறேன், இந்த வில்லிவாக்கம் தொகுதியில் நம்முடைய வேட்பாளர் வெற்றியழகனை நீங்களெல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். உதயசூரியனுக்கு ஆதார் தரவேண்டும்.
எழும்பூர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் நம்முடைய கழக வேட்பாளர் அருமை சகோதரர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரிக்கவேண்டும்.
நம்முடைய வேட்பாளர் பரந்தாமனைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். நீங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத மேடைகளில் நிச்சயமாக அவரை பார்க்கலாம்.
நம்முடைய கழகத்தின் சார்பில் அவர் தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கையைப் பேசுவார். நம்மை எதிர்த்து, நம்மை விமர்சனம் செய்யும் பிரச்சினை வந்தால் அதில் விடாமல் பிடிப்பாக இருந்து, சரியான சவுக்கடி போலப் பதிலடி கொடுக்கின்ற சிறந்த ஆற்றலாளர்.
எனவே அப்படிப்பட்டவர் சட்டமன்றத்திற்கு வந்தால் அங்கே இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் நிச்சயமாக தன்னுடைய வாதங்களை எடுத்துரைப்பார். அந்த வாய்ப்பை அவர் பெறப் போகிறார்.
அதனால், பரந்தாமனை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
திரு.வி.க.நகர்
நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்த திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமைச் சகோதரர் தாயகம் கவி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் வரக்கூடாது, வளரக்கூடாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்திற்காக வந்தார். அவ்வாறு வந்தபோது கோவையில் பெரிய அராஜகத்தை நடத்தி காண்பித்தார்கள். அதை நீங்கள் தொலைக்காட்சிகளில், சமூகவலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.
அங்கு பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, நாங்கள் கூட்டம் நடத்தப்போகிறோம், நீங்கள் கடைகளைத் திறக்கக்கூடாது என்று சொல்லி அடித்து உடைத்து, பெரிய ரகளையில் ஈடுபட்டு, பல பேருக்கு காயம் ஏற்பட்டு, ஏன் காவல்துறையினருக்கே காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுமைகள் நடந்தன.
அதற்காகத்தான் அங்கு பாஜக வந்துவிடக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் சொல்லியிருக்கிறோம். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களித்து தாயகம் கவி அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
கொளத்தூர்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 16-ஆவது தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும், உங்களில் ஒருவனான மு.க.ஸ்டாலினின் அன்பு வணக்கம்!
தமிழுக்குப் பெருமையும் - தமிழினத்துக்கு உரிமையும் - தமிழ்நாட்டுக்குச் செழுமையும் உருவாக்க 1949-ஆம் ஆண்டு "திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற உரிமைப் பேரியக்கத்தை ‘காஞ்சி தந்த வள்ளுவன்’ நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள்!
பதினெட்டு ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் எல்லாத் தெருக்களிலும் தன்னுடைய கன்னித்தமிழால் கழகம் வளர்த்தார், பேரறிஞர் அண்ணா. வீறு கொண்ட போராட்டங்கள் மூலமாக கழகத்தை உயிர்த்தெழச் செய்தார் அண்ணா. அவருடைய தமிழாலும் - போராட்டங்களாலும் 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் நாம் உட்கார்ந்தோம். காலம் நமக்கு வழங்கிய கொடையான பேரறிஞர் பெருந்தகையை, அதே காலம் தன்னிடம் விரைந்து எடுத்துக் கொண்டது.
அடுத்து வந்தார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அண்ணனுக்குத் தம்பியாக - உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பாக - தலைவர்களுக்கெல்லாம் தலைவராக - முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராக - கழகத்தை நடத்தினார். அரியணையில் அமர்த்தினார். அண்ணாவின் பேரியக்கத்தை நான்கு முறை ஆட்சியில் அமர வைத்தார். இன்றைக்கு நாம் காணுகிற நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, நம்முடைய கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டின் நகரங்கள் - கிராமங்கள் என எங்கு சென்றாலும் கலைஞர் உருவாக்கிய திட்டங்கள்தான் கண்ணில் படும்.
பார்க்கின்ற இடங்களிலெல்லாம் கழகம் உருவாக்கிய பள்ளிகள் - கல்லூரிகள் - பல்கலைக்கழகங்கள் - மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவமனைகள் - நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் இருக்கின்றன என்றால், அவை அனைத்தும் கழகத்தால் தமிழகம் அடைந்த பயன்கள்.
கலைஞரால் படித்தவர்கள் - கலைஞரால் வேலை பெற்றவர்கள் - கலைஞரால் உதவி பெற்றவர்கள் - கலைஞரால் உயர்ந்தவர்கள் என்று கணக்கிட்டாலே, அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கான பேர்களைத் தாண்டும்.
திருவாரூர் வீதிகளில் சின்னஞ்சிறு சிறுவனாக, கால் சட்டை அணிகிற பருவத்தில், தமிழ்க் கொடியோடு புறப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள்தான், கோட்டை கொத்தளத்தில் இந்திய நாட்டின் தேசியக் கொடியை அதிக முறை ஏற்றிய தமிழ்நாட்டு முதலமைச்சர்!
அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவரும் அவர்தான்! அவர் கோட்டையில் கொடி ஏற்றிய காலமெல்லாம், தமிழ்க் கொடி ஏறியது! தமிழன் கொடி ஏற்றினான். தமிழ்நாடு பட்டொளி வீசிப் பறந்தது! அவர் மறையும்போது முதலமைச்சராக இல்லை என்பதுதான், நமக்கெல்லாம் இருக்கின்ற வருத்தம்.
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது என்கின்ற லட்சியத்தை நிறைவேற்றி விட்டேன் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் காட்ட நினைத்தேன். ஆனால், முதுமை காரணமாக அவர் முந்திக் கொண்டார். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 6.
தலைவர் கலைஞர் அவர்கள், 14 வயதில் நான் பொதுவாழ்வுக்கு வந்ததில் இருந்து எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார். போராட்டம் நடத்தக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்குப் பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார். மக்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும், உடனே சென்று அவர்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களாகிய உங்களுடைய வாழ்விலும் தாழ்விலும் - சுகத்திலும் துக்கத்திலும், உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.
புயலா? மழையா? வெள்ளமா? நிலச்சரிவா? - எங்கே மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்தாலும் முதல் ஆளாக நான் சென்றிருக்கிறேன்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை இந்தப் பழனிசாமி அரசாங்கம் துடிக்கத்துடிக்கக் கொன்ற போதும் உடனடியாக நான் சென்றேன். அந்தக் கலவர பூமிக்குச் சென்றேன். நீட் தேர்வு காரணமாக தங்களுடைய மருத்துவக் கல்லூரிக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்களின் வீடுகளுக்குச் சென்றேன். அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களால் விபத்துக்கு உள்ளாகி இறந்து போன மாணவி வீட்டுக்கு உடனடியாகச் சென்று உதவி செய்தேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தினேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் போராடினோம். காவிரி உரிமை மீட்புக்காக நடைபயணம் சென்றோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்த கைகள்தான் இந்த ஸ்டாலினுடைய கைகள். இப்படி மக்களோடு மக்களாக இருந்தவன் தான் இந்த ஸ்டாலின்.
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்களுடன் என்னுடைய வாழ்க்கை இரண்டறக் கலந்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்தபோது மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த போது மக்களுடைய தேவைகளுக்காக வாதாடியிருக்கிறேன். இப்படி எந்த நிலையில் இருந்தாலும், மக்களுக்காக மக்களோடு இருக்கிறவன் நான்.
14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை ஆரம்பித்து, மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டில் என்னுடைய கால் படாத கிராமமே இல்லை! நான் பயணம் செய்யாத நகரமே இல்லை!
தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளுகிற உதவிக்கரம் என்னுடையதுதான்! அந்த அடிப்படையில், இறுதிக்கட்டப் பரப்புரையில், வாக்காளப் பெருமக்களிடம் அன்போடும், உரிமையோடும், பணிவோடும் கேட்கிறேன். தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் உழைக்க நான் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’- என்கின்ற பத்தாண்டுத் திட்டத்தையும் அறிவித்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்குமான செயல்திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் நான் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை நிறைவேற்றினால் தமிழகம் ஒளிமயமானதாக அமையும்! தமிழ்நாட்டின் எதிர்காலம் வண்ண மயமானதாக மாறும்! அப்படி மாற்றிக் காட்டுவதற்கு, எனக்கு வாய்ப்பளியுங்கள்.
மக்கள் பணியில் இருக்கிற நான், தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கிற ஒரே கோரிக்கை - உங்களுக்கு உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள்! இந்த ஒற்றைக் கோரிக்கையைத்தான் உங்களிடம் நான் வைக்க விரும்புகிறேன்!
இப்படி ஒரு கோரிக்கையை வைக்கிற நான் - தமிழ் மக்களின்பால் எனக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் கேட்கிறேன். உங்களுக்கு ஆற்றிய கடமையின் அடிப்படையில கேட்கிறேன். உங்களுக்குச் செயல்படுத்திக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் கேட்கிறேன்.
சென்னை மாநகரத்தின் மேயராக - உள்ளாட்சித் துறை அமைச்சராக - தொழில்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்து ஏராளமான மக்கள் சேவையை ஆற்றி வந்தவன் என்கின்ற பெருமிதத்தோடு நான் கேட்கிறேன். இந்தத் தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞருடைய மகனாக நான் கேட்கிறேன்... உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கும் உங்களில் ஒருவனாக நான் கேட்கிறேன்.... உங்களுக்கு உழைக்க எனக்கு ஆணையிடுங்கள்...!
ஜனநாயகத்தில் இறுதி எஜமானர்கள், மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் முடிவெடுத்து எனக்கு உத்தரவிடுங்கள். மக்களின் ஆட்சியை - உங்களின் ஆட்சியை நான் நடத்திக் காட்டுவேன்.
கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக மக்கள் கிராம சபைகளைக் கூட்டி மக்களைச் சந்தித்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ - என்கின்ற நிகழ்வின் மூலமாக மக்களைச் சந்தித்தேன். உலகின் மாபெரும் பேரிடரான கொரானா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ என்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலமாக மக்களைச் சந்தித்தேன். புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன்.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி கலைஞர் பிறந்த திருவாரூரில் நான் என்னுடைய தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். இன்றைக்கு நான் போட்டியிடுகிற நம்முடைய கொளத்தூரில் என்னுடைய பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்கிறேன்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், இந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசி இருக்கிறேன். 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறேன். போகிற இடங்களிலெல்லாம் தினமும் - ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கிறேன். இந்த ஆட்சிக்கு எதிரான மக்களின் கோப அலையை சுனாமியாகப் பார்க்கிறேன்.
இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி எப்போது? இந்த கொத்தடிமைக் கும்பலை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள்? இந்தக் கொள்ளைக்கூட்டம் சிறைக்குப் போவது எப்போது? என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக, நிர்வாகம் என்கின்ற ஒன்றே இல்லை. 2011-ஆம் ஆண்டு வெற்றி பெற்று வந்த அம்மையார் ஜெயலலிதா, தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க எடுத்த முயற்சிகளில் தோல்வியைத் தழுவி, நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று, சிறைக்குப் போய் பதவியை இழந்தார். அவர் சிறைக்குப் போன காரணத்தால முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்தார். சிறையில் இருந்து திரும்பி வந்த அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார். 2016-இல் இறந்து போனார். இப்படி முதல் ஐந்தாண்டு காலம் போனது.
அதன்பிறகு, அ.தி.மு.க.வின் கோஷ்டிச் சண்டையால் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பழனிசாமியும் - பதவியைக் கைப்பற்ற பன்னீர்செல்வமும் நடத்திய நாடகங்களினால், அடுத்த ஐந்தாண்டு காலம் போனது.
இதுதான் கடந்த பத்தாண்டுகால தமிழக ஆட்சியின் சுருக்கம். இதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் அடைந்த அத்தனை பின்னடைவுகளையும் சரி செய்தாக வேண்டும்!
தமிழகத்தைக் கூறுபோட்டு விற்க நினைக்கும் பா.ஜ.க.வுக்குப் பக்கத் துணையா, அடிமையாக இருக்கிறது பழனிசாமி அரசு.
மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்துக்கும் தலையாட்டிக் கொண்டு பா.ஜ.க.வின் கொல்லைப்புற அரசாங்கத்தை முதலமைச்சர் பழனிசாமி நடத்தினார்.
அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, பா.ஜ.க. தமிழினத் துரோகத் திட்டங்களைத் தடையின்றி அமல்படுத்தியது. மொத்தத்தில் இது, அ.தி.மு.க.வை முகமூடியாகப் போட்டுக் கொண்ட பா.ஜ.க. அரசுதான். இப்படி மக்களாட்சியைக் கடந்த ஐந்தாண்டுகளாகக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
பழனிசாமி கும்பலை முடிந்த வரை கொள்ளையடிக்க அனுமதித்தது பா.ஜ.க. பா.ஜ.க.வை முடிந்த வரைக்கும் தமிழினத் துரோகம் செய்ய அனுமதித்தது அ.தி.மு.க. இந்த இரண்டு சுயநலச் சக்திகளிடமிருந்தும் கோட்டையை மீட்டாக வேண்டிய போர்தான், இந்தத் தேர்தல்! அதற்காகத்தான் உங்களை நாடி வந்திருக்கிறேன்.
தமிழக மக்களாகிய உங்களைச் சந்திக்கும் போது, நான் பூரித்துப் போகிறேன். பாச மழையில் நான் நனைந்து போகிறேன். கலைஞரின் மகனாக மட்டுமல்ல - மக்களின் மகனாக நான் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பதைத்தான் இது காட்டுகிறது.
மக்கள் என்னைத் தங்களுடைய மகனாக - சகோதரனாக - அண்ணனாக - தம்பியாக நினைப்பதை நான் நேருக்கு நேராகப் பார்க்கிறேன். அன்பு மிகுதியால், என் கன்னத்தைத் தடவிப் பார்த்து தங்களுடைய அன்பைப் பொழிந்தவர்களைப் பார்த்த போது, என்னையும் அறியாது, என் கண்கள் கலங்கின.
குழந்தைகள் என்னை நோக்கி ஓடிவருவதைப் பார்க்கிற போது, இந்தத் தமிழ்ச் சமுதாயம் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தோன்றும்! உங்களுக்காக உழைப்பதைவிட, சிறந்த கைம்மாறு வேறு என்ன இருக்க முடியும்?
கோடிக்கணக்கான தமிழ்மக்களுக்கு உண்மையாக இருப்பதும் - உங்களுக்காக உழைப்பதும் மட்டும்தான் என்னுடைய நன்றியின் அடையாளமாக இருக்க முடியும்.
மு.க.ஸ்டாலின் ஆகிய நான் கேட்கிறேன்... உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கும் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நான் என்று சொன்னால், இந்த, "மு.க.ஸ்டாலின்" என்கின்ற பெயருக்குள் பெரியார் இருக்கிறார். அண்ணா இருக்கிறார். கலைஞர் இருக்கிறார். கழகம் இருக்கிறது. கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். எழுபதாண்டு காலமாக எழுந்து நிற்கும் கழகத்துக்காக உயிரைக் கொடுத்த எத்தனையோ உத்தமர்கள் இருக்கிறார்கள்.
சென்னைக்கே வராமல் - எந்தப் பதவியையும் நாடாமல் - தன்னுடைய வீட்டு வாசலில் ஒரு கரிக்கட்டையால் உதயசூரியன் சின்னத்தை வரைந்து விட்டு - கழக வெற்றியை பொங்கல் திருவிழாவைப் போல கொண்டாடக் காத்திருக்கிறானே, அந்த உடன்பிறப்புகளைப் பிரதிபலிப்பவன்தான், இந்த மு.க.ஸ்டாலின்!
இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக நிர்வாகம் சீரழிந்து விட்டது; தமிழக நிதிநிர்வாகம் சிதைந்து விட்டது; கடன் வாங்குவது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்; வாங்கிய கடனைச் சுருட்டுவது மட்டுமே அவர்களுடைய ஒரே வேலை.
புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுகளால் கல்வி சிதைந்தாலும், அவர்களுக்குக் கவலை இல்லை; வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயம் பாழானாலும் அவர்களுக்கு அதில் அக்கறை இல்லை; குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டாலும், அது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.
பெட்ரோல், டீசல் விலை ஏறி, விலைவாசி ஏறினாலும் அதுபற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இந்தித் திணிப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள்; சமஸ்கிருதத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள்; மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் இடம் பெறுவது குறித்து அவர்களுக்கு ஆர்வம் இல்லை. தமிழக அரசுப்பணிகளுக்குள் வடமாநிலத்தவரைத் திட்டமிட்டு நுழைத்து விட்டார்கள். புதிய திட்டமிடுதல்களும் இல்லை. பழைய கட்டமைப்புகளைச் சிதைப்பதும் அதிகமாக நடந்தது.
இப்படித் தமிழகத்தை ஐம்பது ஆண்டு காலம் பின்னோக்கி வேகமாகப் போக வைத்த அரசுதான், அ.தி.மு.க. அரசு. பழனிசாமிக்கு ஆளத்தெரியாது. அதனால் ஆளுவதைப் போல நடித்துக் கொண்டு இருந்தார். இந்த நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மீண்டும் தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! அதற்கான ஆட்சிதான், அமையவிருக்கிற தி.மு.க. ஆட்சி!
தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது. நான் உறுதியளிக்கிறேன் - இந்தப் பேரழிவில் இருந்து தமிழகத்தை நான் மீட்டெடுப்பேன். பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்குச் சமம். வெற்றி பெறும் ஒன்றிரண்டு அ.தி.மு.க.வினரையும் மிரட்டி பா.ஜ.க.வில் சேர்த்து விடுவார்கள்.
எற்கனவே அ.தி.மு.க. எம்.பி., ரவீந்திரநாத், பா.ஜ.க.வில்தான் இருக்கிறார். இது அரசியலில் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா! இந்த அயோக்கியத்தனத்துக்கு அரசியல் ரீதியாகத்தான் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அ.தி.மு.க.வை மிரட்டுகிற மாதிரி பா.ஜ.க.வால் தி.மு.க.வை மிரட்ட முடியாது. நாம் மிசாவைப் பார்த்தவர்கள். அடக்க அடக்கத்தான் திமிறி எழுவோம். ரெய்டு நடத்துகிறீர்களா? நடத்துங்கள்!
ரெய்டு நடத்தினால்தான் கழகத் தொண்டனுக்கு உணர்ச்சி கூடும். பயந்து போய் வீட்டுக்குள் முடங்க நாங்கள் பழனிசாமியோ பன்னீர்செல்வமோ அல்ல! இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளை வேறு எங்கேயாவது வைத்துக்கொள்ளுங்கள்.
தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமென்றால் நேரடியாக வாருங்கள்! கொள்கையோடு வாருங்கள்! கோட்பாட்டுகளோடு வாருங்கள்! மக்கள் மத்தியில் வந்து வாதாடுங்கள்! வருமான வரித்துறையை வைத்து மிரட்டாதீர்கள். நீங்கள் மிரட்டுவது, தனிப்பட்ட ஸ்டாலினை அல்ல, கலைஞருடைய மகன் ஸ்டாலினை! கலைஞருக்கு லட்சக்கணக்கான ஸ்டாலின்கள் இருக்கிறார்கள்! கழகத்தைக் காக்க - தமிழகத்தைக் காக்க ஒவ்வொருவரும் கலைஞராக விஸ்வரூபம் எடுப்பார்கள். அந்த விஸ்வரூபத்தைதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க. பார்க்கிறது.
பெரியார் சிலைக்கு காவி அடித்தீர்கள். இதோ, இப்போது மோடி பெயரையே அழிக்க வேண்டிய நிலை வந்து விட்டதா இல்லையா? தமிழர்களுடைய உரிமைகளுக்குப் பாதகம் செய்து விட்டு, தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகள் மட்டும் வேண்டும் என்றால், தமிழர்கள் ஒன்றும் ஏமாந்த சோனகிரிகள் அல்ல!
ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட இனம் தமிழினம். அந்த இனம் தன்னுடைய மொழியைக் காக்க, தன்னுடைய தேகத்தில் தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட தியாக மறவர்களைக் கொண்ட இனம்!
தமிழர்களைப் பழித்தவர்கள் தலையில் கல் வைத்து எடுத்து வந்த இனம். கீழடிப் பெருமை கொண்ட இனத்தை கீழ்மைப்படுத்த நினைப்பவர்களை அரசியல் ரீதியாக அப்புறப்படுத்த தமிழர்கள் என்றும் தயங்கமாட்டார்கள்.
“லட்சியம் என்பது எட்டிப் பறித்திடும் மல்லிகை அன்று. ஏறிப் பறித்திடும் மாங்காயும் தேங்காயும் அல்ல. எதிர்நீச்சல் போட்டு எரிமலை மீது கொடி நாட்டல்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
என்னுடைய லட்சியம் என்பது, வளமான தமிழகம் - வலிவான தமிழகம் - வறுமை ஒழிந்த சமத்துவத் தமிழகம் - சுயமரியாதைத் தமிழகம். அந்த இலட்சியப் பாதையை நோக்கிச் செல்வதற்கு வலுச்சேர்த்திட உங்களுடைய உறுதுணையை என்றும் வேண்டுகிறேன்.
அண்ணாவும் கலைஞரும் எனக்குக் கற்றுக் கொடுத்த அரசியல் பாடத்தில் இருந்து கிஞ்சித்தும் மாறாமல் - தடம் புரளாமல் இந்த ஸ்டாலின் பயணம் செய்வான் என்கின்ற உறுதிமொழியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குகிறேன்!
தமிழகத்தின் பரந்து பட்ட எதிர்காலத்தை மனதில் வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தீட்டப்பட்டது. மாவட்டங்கள் தோறும் மக்களுக்கு உள்ள கோரிக்கைகளைத் தொகுத்து மாவட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
ஏழு முக்கியமான துறைகளில் பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை மார்ச் 7-ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உறுதிமொழிகளாக வழங்கி இருக்கிறேன்.
அதோடு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்வின் மூலமாக தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு, அதனை எழுதி வாங்கி இருக்கிறேன். இதுவரை பல லட்சம் பேர் மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களுடைய கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதற்கான அத்தாட்சி ஆவணத்தையும் உங்களிடம் நான் வழங்கியிருக்கிறேன்.
இலட்சக்கணக்கான குடும்பங்களின் கோரிக்கைகள், கவலைகள், விண்ணப்பங்கள் 100 நாள்களில் தீரப்போகிறது. அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்! அதாவது 100 நாளில் தீர்க்கப் போகும் பிரச்சினைகள் - ஐந்தாண்டு காலத்தில் உருவாக்கப்படக் கூடிய திட்டங்கள் - பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் - என எனக்கு நானே வரையறைகளைத் தீட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிப்பதன் மூலமாக, தமிழ்நாட்டு மக்கள் தங்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஏப்ரல் 6-ஆம் நாள் உங்கள் கையில் உள்ள அரசியல் அதிகாரத்தை அ.தி.மு.க.வுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள். பத்தாண்டு காலத்தில் தமிழகத்தைப் பாழ்படுத்திய அரசியல் கயவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆயுதம் உங்கள் கையில்தான் இருக்கிறது. அந்த ஆயுதத்தின் மூலமாக அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
மு.க.ஸ்டாலின் ஆகிய நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன்! நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்! மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான தமிழ்நாட்டை நாளை அமைப்போம்!
தந்தை பெரியாரின் பெயரால் கேட்கிறேன்! பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் கேட்கிறேன்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் கேட்கிறேன்! ஆதரிப்பீர் உதயசூரியன்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை!
உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னங்களுக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்து முழுமையான வெற்றியைத் தாருங்கள்!
ஆட்சி அமைக்கப் போவது தி.மு.கழகம்தான். எனவே சிதறாமல் உங்களது வாக்குகளை வழங்குங்கள்! வாக்குகளை வீணடித்துவிடாதீர்கள்! வெற்றிச்சின்னமாம் உதயசூரியனுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் அளிப்பீர்! தி.மு.க. எப்போதும் - சொன்னதைச் செய்தது; செய்வதை மட்டுமே சொன்னது.
தமிழக மக்களே! ஏப்ரல் 6 - தமிழகத்தின் பத்தாண்டுகால ஏக்கம் தீரும் நாள்! மே 2 - தமிழகத்தின் மாபெரும் வளர்ச்சியின் தொடக்க நாள்! கொளத்தூர் அகரத்தில் நின்று சொல்கிறேன், நிச்சயம் கழகம் சிகரத்தைத் தொடும்! கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி வணக்கம்!
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !