Tamilnadu
அ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளையர்கள்... ரூ. 1 கோடி பறிமுதல் வழக்கில் திடீர் திருப்பம்!
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் கடந்த 23ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அ.தி.மு.க வேட்பாளர் செல்வராஜ மகன் ராமமூர்த்தியின் காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இது குறித்து காரில் இருந்த ரவிச்சந்திரன், சத்யராஜ், ஜெயசீலன், சிவகுமார் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, இந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டனர். பின்னர் இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, உரிமை கோராத பணம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை, தேர்தல் ஆணையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட எஸ்.பி ராஜன், உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது.
இதையடுத்து புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர். பிறகு இவர்கள் இந்த பண மூட்டை குறித்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேட்பாரற்றுப் பணம் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொள்ளை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, முசறி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் செல்வராஜுக்கு தேர்தல் செலவுக்காக கோவையில் இருந்து 3 கோடி ரூபாய் கொண்டு செல்லப்படுவதாக, அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம் பிரபல ரவுடி ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பிரபல ரவுடியின் தூண்டுதலின்படி ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், சுரேஷ், ராஜ்குமார், சிவா மணிகண்டன், பிரகாஷ் ஆகியோர் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளனர். இதன்படி மூன்று கோடி ரூபாய் பணத்துடன் வந்த காரை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் தேர்ல் பறக்கும் படை அதிகாரிகளிடம் மாட்டாமல் இருப்பதற்காக, ஒரு கோடி ரூபாய் பணத்தை எம்.ஏல்.ஏ மகன் ராமமூர்த்தியின் காரில் போட்டுவிட்டு, வேறு காரில் 2 கோடி ரூபாயுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், கொள்ளைபோன ரூ. 3 கோடி பணத்துக்கு கணக்கு இல்லாததால், அதிகாரிகள் துணையுடன் இந்தக் கொள்ளை சம்பவத்தை மறைத்து, தேர்தல் சோதனை நாடகமாடியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு கொள்ளையர்களையும் தனிப்படை போலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. கொள்ளையர்களை ஏவிய பிரபல ரவுடியை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?