Tamilnadu

“விஜயபாஸ்கர் வெற்றி பெற வாய்ப்பில்லை” : கருத்துக்கணிப்பு நடத்தியவர்களை தாக்கிய அ.தி.மு.க அடியாட்கள்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் அ.தி.மு.க கூட்டணியினர் தோல்வி பயத்திலிருந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரியை சேர்ந்த தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம், நேற்று கரூரில் பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்திக் கொண்டிருந்தது.

அப்போது, பெரிய காளிபாளையம் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தேர்தல் பரப்புரையைப் படம் எடுத்துள்ளனர்.

இதைப் பார்த்த அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள், ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று கூட கேட்காமல், கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் செல்போனை அராஜகமாக பறித்துக் கொண்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அ.தி.மு.கவினருக்கு சாதமாக, கருத்துக் கணிப்பு நடத்தியவர்களை விசாரணைக்கு வருமாறு கூறி காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு பல மணிநேரம் அவர்கள் காத்திருந்தும், காவல்துறையினர் செல்போனை தராமல், அ.தி.மு.கவை சேர்ந்த கோவர்த்தன் என்பவரிடம் செல்போனை கொடுத்தனர். இந்நிலையில் இது குறித்து பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரியை இயக்குனர் பாலமுருகன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் புகார் அளித்தார்.

அப்போது, மகேஸ்வரன் புகார் மனுவை வாங்க மறுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம். அளிக்குமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அ.தி.மு.கவினர் மீதும், புகாரை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Also Read: இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!