Tamilnadu

"ஜெயிக்கவே முடியாதுனு தெரிஞ்சும் போட்டி போடும் SUPER NOTA” - கார்த்தி சிதம்பரம் தாக்கு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி அ.தி.மு.க கூட்டணி களம் காண்கிறது. இதனால் இந்த தேர்தலில் இருமுணை போட்டி என்ற நிலை இருந்தாலும், நாங்களும் இருக்கிறோம் என அ.ம.மு.க, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அ.தி.மு.க கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது.

இந்நிலையில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என கமலும், சீமானும் கூவிக் கூவி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எங்களுக்கு ஓட்டுப் போட்டால் தான் தமிழகம் நல்லா இருக்கும், நீங்க நல்லா இருப்பிங்க என தங்கள் இஷ்டம்போல் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “கமல்ஹாசன், தினகரன், சீமான் போன்றோர் சூப்பர் நோட்டா. ஜெயிக்கவே மாட்டாம்னு தெரிஞ்சு போட்டி போடுறாங்க” என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., "இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் போட்டி. தினகரன் பங்காளி சண்டையைத் தீர்ப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடுகிறார். கமல்ஹாசன் நான் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்கிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியும் தமிழ் தேசியத்தை பேசி தேர்தலில் நிற்கிறது. இவர்கள் யாருமே ஜெயிப்பதற்காக போட்டியிடவில்லை, நாங்களும் உள்ளோம் அய்யா என்பதை காட்டவே நிற்கிறார்கள். இவர்கள் தான் சூப்பர் நோட்டா. ஜெயிக்கவே மாட்டோம் என்று தெரிஞ்சு போட்டி போடுறாங்க. தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தான் போட்டி" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘ஆர்டர் போடாத நீ..’ : நேரலையில் பெண் நெறியாளரை நோக்கி அநாகரீகமாகப் பேசிய பா.ஜ.க நாராயணன்!