Tamilnadu
“கலைஞரின் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்” - THE WEEK வார இதழ் புகழாரம்!
THE WEEK ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணியின் ரகசியத்தை தமிழக மக்கள் நன்கறிவார்கள்" என்றும் "முதலமைச்சருக்கான கவுரவத்தையே அடமானம் வைத்து, சொந்த லாபத்திற்காக தமிழ்நாட்டையே அழித்துவிட்டார் பழனிசாமி’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் ஏப்ரல் மாத "தி வீக்" ஆங்கில வார இதழில் "உதயமகன் (RISING SON) என்ற குறிப்புடன் திராவிடச் செயல் திட்டத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்" என்ற தலைப்பில் அவருடைய வளர்ச்சியைப் பற்றி விளக்கமான முன்னோட்டத்துடன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டியை அதன் சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.
அந்த முன்னோட்டத்தில் லட்சுமி சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக "தி வீக்" ஏட்டின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் அவரது மகன் மு.க.ஸ்டாலின் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது முதுபெரும் தலைவரான அவர் உறுதியாக எதையும் குறிப்பிடவில்லை. "மலர் எப்போது மலரும் என்று என்னால் அனுமானிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் எதிர்ப்பே இல்லாத தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரம்பரிய எதிரிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். பழமையான மாபெரும் திராவிட இயக்கத்தில், போதுமான அளவுக்கு கொள்கைகளில் வளைந்து கொடுக்கும் இணக்கமான நிலையை ஏற்று புதிய கால அரசியலின் சவால்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். அவர் ஒரு எச்சரிக்கையான மனிதர், படிப்படியாக செயல்படக் கூடியவர், இப்போது அவர் அடியெடுத்து வைத்து முன்னேறுகிறார்" என்று சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான ராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் உச்சத்தை நோக்கிய பயணம் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. அவருடைய அரசியல் பயணம் 1967-ல் தொடங்கியது. அப்போது 14 வயதாக இருந்த அவர், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முரசொலி மாறனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். நெருக்கடி நிலை காலத்தில் சிறையிலடைக்கப்பட்ட அவரை, கலைஞர் அவர்கள், தி.மு.க. பொறுப்பில் உயர்த்தும் வரை பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. "ஸ்டாலின் அவர்கள் இன்று இருக்கும் நிலையை எட்டுவதற்கு பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். அவர் எங்கள் கட்சியின் இயற்கையான தலைவர்" என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தி.மு.கழகத்தின் பாரம்பரிய எதிரிகளான அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இருந்த போதிலும் திராவிடத்தின் இதய பூமியில் பா.ஜ.கவின் ஆக்ரோஷமான அழுத்தம் ஒரு புதிய சவாலாக கொள்கை ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் அமைந்துள்ளது. கலைஞர் அவர்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த முதல் நிர்வாகப் பொறுப்பு சென்னை மாநகர மேயர் ஆகும். அதில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ‘சிறந்த நிர்வாகி’ என்ற பெயரை எடுத்தபோதிலும், முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்திருத்தத்தால் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் அதை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்!
2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி பின்னடைவை அளித்த போதிலும் 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கழகம் ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் பெற்ற மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகளுக்குப் பின் துணை முதலமைச்சராகவும் ஆனார். 2016-ல் அவர் தி.மு.க.வின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும் 2018-ல் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். "ஸ்டாலின் தலைவருக்குரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்டார். நீண்ட காலம் அவர் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்".
கலைஞர் அவர்கள் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று தி.மு.க தொண்டர்கள் நம்புகின்றனர். இவ்வாறான முன்னோட்டத்துடன் "தி வீக்" ஆங்கில வாரப் பத்திரிகை அதன் சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியை வெளியிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!