Tamilnadu
‘தமிழ்நாடு மாடல்’ வெற்றிக்கூட்டணியை இந்திய அளவில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உண்டு!
“அ.தி.மு.க.வின் மாஸ்க்கை கழற்றினால் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. முகம் தெரியும்” என்றார் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி. சென்னையிலும் சேலத்திலும் அவர் மேற்கொண்ட பரப்புரையின் பெரும்பகுதி, மோடி-அமித்ஷா பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்தனத்தின் ஒற்றை ஆட்சிப் போக்கையும் மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தை அடிமையாக்கி வைத்திருக்கும் நிலையையும் சுட்டிக்காட்டின.
பன்முகத்தன்மை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம். இது தனி நாடு அல்ல. பல மாநில அரசுகளின் ஒன்றியம். அப்படித்தான் அரசியல் சட்டம் கூறுகிறது. அதனை சிதைக்கும் வேலையை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ராகுல் இதை சுட்டிக்காட்டும்போது, தமிழ்நாட்டின் தன்மானத்தை முன்னிறுத்திப் பேசினார். தன்மானம் எனும் சுயமரியாதை இந்த மாநிலத்தில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால அரசியல் - சமுதாய வரலாற்றின் அடித்தளமாக இருக்கிறது.
மாநில உரிமைகள் குறித்த குரலும் தமிழ்நாட்டிலிருந்துதான் இந்திய நாடாளுமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கு முன் ஒலித்தது. காங்கிரஸ் அதனை கவனிக்கத் தவறிய காலம் ஒன்று உண்டு. அதன் விளைவாக, அந்தந்த மாநிலங்களில் ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, கட்சியும் பலவீனமாகிவிட்டது. வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த எதிரியின் வலிமையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், இந்திய ஒன்றிய அளவிலான தோழமை சக்திகளை காங்கிரஸ் ஒருங்கிணைத்திட வேண்டும்.
அதைத்தான் சேலம் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அந்த மேடையில் பேசிய ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, திருமா, இடதுசாரித் தலைவர்கள், சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள், சமூக நீதி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே குரலில் பாசிச அரசியலை எதிர்த்துப் பேசினர். அதனடிப்படையில்தான், ‘தமிழ்நாடு மாடல்’ வெற்றிக் கூட்டணியை இந்திய அளவில் விரிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ராகுல்காந்திக்கு இருப்பதை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சேலம் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, எடப்பாடி தொகுதியில் வீதியில் நடந்து வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின். வீடுகள், கடைகள், நடந்து சென்றோர் எனப் பலரிடமும் அவர் வாக்கு கேட்ட அதே நேரத்தில், மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உள்பட பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் பரப்புரை செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதாவை ‘அம்மா’ என்றும், மோடியை ‘டாடி’ என்றும் உவமை சொல்லி ‘பெருமைப்படுத்திய’ அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவரான பழனிசாமி, தாய் சென்ட்டிமென்ட்டில் உருகி ஓட்டுக் கேட்டார். அத்துடன், “மேயராக இருந்த ஸ்டாலின் சென்னைக்கு என்ன செய்தார்?” என்றும் கேட்டார். அவர் பக்கத்தில் நின்றிருந்தவர்களே மனதுக்குள் சிரித்திருப்பார்கள். க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் அரசு இல்லத்திலிருந்து வடசென்னைக்கு அவர் வரும் வழியில் கடந்து வந்த பாலங்கள் எல்லாமே மு.க.ஸ்டாலின் சென்னை மேயராகவும் தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது கட்டப்பட்டவைதான்.
பழனிசாமி மட்டுமல்ல, மர்மமாக இறந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போயஸ் கார்டனிலிருந்து கோட்டைக்குப் போவதற்காக ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்பியதும் பயணித்த மேம்பாலம் உள்பட எல்லாமும் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது கட்டப்பட்டதுதான். ஜெயலலிதாவும் பழனிசாமியும் மட்டுமல்ல, அரசியல் பிழைப்புக்காக அ.தி.மு.கவும் பிற உதிரிகளும் அன்றாடம் பயணிப்பது தி.மு.க. எனும் முக்கால் நூற்றாண்டுகால உறுதிமிக்க பாலத்தின் மீதுதான்.
- நன்றி : கோவி லெனின்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?