Tamilnadu

"1000 ரூபாய் சம்பாதிக்க வக்கில்லையா?” - கட்சியை நிர்க்கதியாக்கிவிட்டு மக்களை அவமதிக்கும் விஜய பிரபாகரன்!

தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட விஜய பிரபாகரன்,“உங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வக்கில்லையா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் கடைசி வரை கூட்டணி குழப்பத்தில் சிக்கித் திணறி, கடைசி நேரத்தில் அ.ம.மு.க-வுடன் கூட்டணியில் சேர்ந்தது தே.மு.தி.க.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்போதே அக்கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது, தொகுதிப் பிரிப்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டது என அக்கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியைச் சம்பாதித்தது.

இந்நிலையில், சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய விஜய பிரபாகரன் வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் கடுமையாகப் பேசியிருப்பது மக்களை முகஞ்சுழிக்க வைத்துள்ளது.

விஜய பிரபாகரன் பேசுகையில், “தற்போது 1,500 ரூபாய் தருகிறேன் எனக் கூறுபவர்கள் கொரானா காலத்தில் மக்கள் கெஞ்சியும் பணத்தை தரவில்லை. நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் விலை போகாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வக்கில்லையா?” எனக் கடுமையாகப் பேசினார்.

இதைக்கேட்ட பொதுமக்கள், விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடாத நிலையில், குடும்பமாகச் சேர்ந்து கட்சியை நிர்க்கதியாக்கிவிட்டு, மக்களைக் குறைசொல்ல வந்துவிட்டார் என முணுமுணுக்கின்றனர்.

Also Read: “கண்ணியக்குறைவை கழகம் ஒருபோதும் ஏற்காது” - உறுதிபடத் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!