Tamilnadu
“கோவில் நிலங்கள் என்ன பா.ஜ.கவின் சொத்தா?” : கூப்பாடு போடும் இந்துத்வா கும்பலுக்கு பதிலடி !
கோயில் நிலங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை நிராகரிப்போம் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புச் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட மதநிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அடிமனை வாடகைதாரர்களாக குடியிருப்பவர்கள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பல லட்சம் பேர் உள்ளனர்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு கடந்த சில வருடங்களாகவே புதியசட்டங்களை கொண்டு வந்து வாடகை, குத்தகையை பல மடங்கு உயர்த்தியும், உயர்த்தப்பட்ட வாடகையை ஒரே தவணையில் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்புவது, வீடுகளை பூட்டி சீல் வைப்பது, வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை செய்வதோடு, அடிமனையில் தங்களுடைய சொந்த உழைப்பின் மூலம் பல லட்சம் செலவு செய்து மேல்கட்டுமானம் செய்துள்ளவர்களையும் அறநிலைய சட்டப்பிரிவு 78, 79ஐ பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றும் நடவடிக்கைகளை எதிர்த்து சட்டரீதியாகவும், மக்களை திரட்டியும் போராடி வருகிறோம்.
எங்கள் அமைப்பின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த 2019ல் தமிழக அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான அரசாணை 318ஐ வெளியிட்டது. அதில் நீண்டகாலமாக கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு அந்த இடங்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து உடனே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து இடைக்கால தடை பெற்றுள்ளனர். பா.ஜ.கவைச் சேர்ந்த எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், ஈஷா மையம் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கோயில் இடத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களையும், கோவில் சொத்துக்களையும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், இந்து அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்றும் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழக முதல்வரும் அரசாணை வெளியிட்டதோடு சரி. அதை செயல்படுத்திட சட்டரீதியான நடவடிக்கைகளை கடந்த இரண்டாண்டுகளாக எடுக்கவில்லை. தனது அரசு கொண்டுவந்த கொள்கைமுடிவான கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசின் முடிவை எதிர்த்து பேசிவரும் தனது கூட்டணி கட்சியான பாஜக தலைவர்களை இதுவரை ஒரு வார்த்தைக் கூட கண்டித்து பேசவில்லை.
தமிழகத்திலுள்ள கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் 99 சதவீதம் பேர் பெரும்பான்மை இந்துக்களே. இந்த பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக தொடர்ந்து பா.ஜ.க கட்சி செயல்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 20.2.2021 தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில வாழ்வுரிமை கோரிக்கை மாநாட்டை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தினோம். இதில் பங்கேற்குமாறு பல்வேறு அரியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.
எங்கள் அமைப்பின் அழைப்பை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்யின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்துணை தலைவர், பொன்.கிருஷ்ணமூர்த்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தீர்மானக்குழு செயலாளர் ஆவடி.அந்திரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நமது கோரிக்கைகளை ஆதரித்து பேசினர்.
மேலும் தங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில் நம்முடைய கோரிக்கைகளை இடம் பெற செய்வதாக உறுதியளித்தனர். அதன்படி தி.மு.க தேர்தல்அறிக்கையில் 92ம் பக்கத்தில் 414வது வாக்குறுதியாக 1989ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைக்கப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளை இடம் பெற செய்துள்ளனர். எனவே, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறசெய்வோம்! நமது நீண்டநாள் கோரிக்கைகளை வென்றெடுப்போம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!