Tamilnadu

”வேலையிழப்பால் கடும் வறுமை... வாழ்க்கையை முடித்துக்கொண்ட தம்பதி” - ஓராண்டு ஊரடங்கில் தொடரும் சோகம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். நெசவாளரான இவருக்கு ரத்னா என்ற மனைவியும், மூன்று பெண் குந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பெண் குழந்தைகளும் இறந்துவிட்டனர்.

இதனால், கிருஷ்ணராஜ், ரத்தினம் தம்பதியர் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான தறி குடோனில் வேலை பார்த்து வந்தனர். இதையடுத்து ஜெகதீசும் கடந்த மாதம் இறந்துபோனால், கிருஷ்ணராஜின் நெசவுவேலை பறிபோனது. பின்னர் அவர் பல இடங்களில் வேலை தேடியும் வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணராஜுக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை.

இதனால் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். பெற்ற குழந்தைகளும் இறந்துவிட்டதாலும், உறவினர்கள் யாரும் உதவி செய்யாததாலும், தங்களை கவனிக்க யாரும் இல்லையே என்ற கவலையில் இந்த தம்பதியர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நீண்ட நேரமாகியும் கிருஷ்ணராஜின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கதவைத் தட்டி உள்ளனர். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. இதனால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்பதிகள் இருவரும், இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தம்பதியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், வேலை எதுவும் கிடைக்காததால் வறுமையின் காரணமாக வி‌ஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வறுமையில் திண்டாடி வருகின்றனர். மேலும் வறுமையிலிருந்து மீள முடியாத நிலையில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒருவருடம் ஆகியும் வறுமையால் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்வதும், அரசுகள் கண்டுகொள்ளாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திடீர் தற்கொலை” : காவலர்களின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம்?