Tamilnadu
“தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை உருவாக்குக” - தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு ஐகோர்ட் ஆணை!
எதிர்வரும் 2021-22ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் எனவும், ஏப்ரல் 18ம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் பெறத் துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக கூறி, இந்த தேர்வு மையங்கள், ஆன் லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்தும், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க கோரியும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களையே தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவர்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடும் என்பதால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால், மற்றவை என்று குறிப்பிட்டால், அதை பரிசீலித்து, அவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து, மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!