Tamilnadu

“ரெப்கோ வங்கி மூலம் அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா” : எடப்பாடி பழனிசாமிக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள்!

தமிழகத்தில் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த எடப்பாடி அரசு, சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.க-வினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.

மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளதால் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளும்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெப்கோ வங்கி மூலம் அ.தி.மு.க பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக்கோரி ரெப்கோ வங்கி நிர்வாகி தேர்தல் ஆணைத்திடம் புகார் மனு அளித்துள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெப்கோ வங்கி மூலம் அ.தி.மு.க பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக் கோரி ரெப்கோ வீட்டு நிதி நிறுவன இயக்குனர் திருவேங்கடம் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் நேரில் சென்று புகார் மனு அளித்தார்.

பின்னர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரெப்கோ வங்கி வீட்டு நிதி நிறுவனத்தின் தலைவர் திருவெங்கடம், பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் நலனுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ரெப்கோ வங்கி, தற்போது அ.தி.மு.க கட்சியின் வங்கியாக மாறியுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், “இந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பணப் பட்டுவாடா செய்வதற்கு துணையாக இருப்பது ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில்குமார். இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராக இருக்கிறார். மேலாண்மை இயக்குநர் இசபெல்லாவும் அ.தி.மு.க-வை சார்ந்தவர் என்பதால் பணப் பட்டுவாடா எளிதில் நடக்க வாய்ப்புள்ளது.

ரெப்கோ வங்கி முலம் செய்யும் பணப் பரிமாற்றத்தை கண்காணிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் வங்கியாக இல்லாததால் பணப் பரிமாற்றத்தை தடுக்கவும் கண்காணிக்கவும் முடியாது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு தேர்தல் முடியும் வரை நேரடி பணப்பரிமாற்றம் நிறுத்தப்பட்டு காசோலை மூலமாகவே கடன் மற்றும் பணப்பரிமாற்றம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் சென்ற முஸ்லிம் சிறுவனை தாக்கிய கும்பல்.. பா.ஜ.க ஆளும் உத்தரகாண்டில் கொடூரம்!