Tamilnadu

தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க மறுப்பு : தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மாறாக, அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்யலாம் எனவும் மனுவில் யோசனை தெரிவித்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக கடந்த 2ம் தேதி, தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இராண்டாவது அலையாக இருக்கலாம் என கவலை தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது என, பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அதேசமயம், பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி மனித விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பாக, அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read: “வந்தாரை வாழவைக்கும் சென்னை எப்போதும் கழகத்தின் கோட்டை” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு !