Tamilnadu

சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து : 40 பேர் படுகாயம் !

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டிவனம் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கலந்து கொள்ளும் பிரச்சார நிகழ்ச்சிக்கு தனியார் வாகனத்தில் திண்டிவனத்திற்கு சென்றனர்.

இவர்களது வாகனம் திண்டிவனம் அருகே கோவிந்தசாமி கலைக்கல்லூரி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி தொகுதி வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ., மயிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் இரா.மாசிலாமணி எம்.எல்.ஏ., திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்து மருத்துவரிடம் தீவிர சிகிக்சை அளிக்க அறிவுருத்தினர்.

மேலும் பலத்த காயம் அடைந்த நபர்களை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனை மருத்துவரிடம் செல் பேசி மூலம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கக் கூடாது” : மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!