Tamilnadu

“கலப்பு திருமண உதவி திட்டம் குறித்து எடப்பாடி ஏஜெண்டுகள் பொய் பிரச்சாரம்” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுங்கட்சியினர் காவல்துறையினர் உதவியோடு தேர்தலை சந்திக்க போவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, மேற்கு மாவட்ட காவல் அதிகாரிகள் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் 14 காவல்துறையினர் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். அமைச்சர் வேலுமணி முதல்வரை போல் அந்தப் பகுதியில் செயல்படுகிறார். கருப்பு சிவப்பு வேட்டி கட்டி செல்லக் கூடாது என மிரட்டுகிறார்கள்.

காவல்துறை அதிகாரிகளும் அவருடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். எனவே உடனே 14 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. ஒவ்வொருவரும் எந்த வகையில் அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை விரிவாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளோம். சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மீது ஏற்கனவே டெல்லியில் புகார் அளித்துள்ளோம்.

அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண திட்டம் அண்ணா துவங்கி வைத்த திட்டம். அண்ணா காலத்தில் துவங்கி கலைஞர், எம்.ஜி.ஆர் தற்போது எடப்பாடி வரை கலப்பு திருமணத்திற்கு ஆதரவளித்து உதவித்தொகை வேலைவாய்ப்பு என திட்டத்தின் மூலம் உதவி செய்து வருகின்றனர் .

தற்பொழுது தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கலப்பு திருமண உதவித் தொகை, அறுபதாயிரம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கம் என வெளியிட்டோம். சிலர் கெட்ட எண்ணம் காரணமாக இந்த திட்டத்தை திரித்துக் கூறி அவப்பெயர் வருவதற்கு வலைதளத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு சாதி பெயர்களை குறிப்பிட்டு, கலப்பு திருமணம் செய்தால் உதவித்தொகை கிடைக்கும் என அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளோம் . விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார். ஆனால் இதைப் பொறுக்காத சிலர் எட்டாம் தர நபர்கள் தவறான விஷயங்களை பரப்பி வருகிறார்கள் என்றும் அது பலிக்காது என்று அவர் கூறினார்.

Also Read: கொரோனா பரவல் எதிரொலி.. பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை? : காத்திருக்கும் மாணவர்கள்!