Tamilnadu

கொரோனா பரவல் எதிரொலி.. பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை? : காத்திருக்கும் மாணவர்கள்!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அ.தி.மு.க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறந்ததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் 9, 10, 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தலைமைச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பள்ளிகளைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் கொரானா வைரஸ் தொற்று பரவலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து உயர் கல்வித்துறையிடம் அரசு அறிக்கை கேட்டுள்ளது.

கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதை கருத்தில் கொண்டும், உயர்கல்வித்துறைக்கும் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து : 40 பேர் படுகாயம் !