Tamilnadu

பள்ளிகளில் வேகமெடுக்கும் கொரோனா : எடப்பாடி அரசின் அவசர கதியால் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள் !

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து படிப்படியாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது இரண்டு மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவை மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கும் சற்று அதிகமாகவே இருக்கிறது.

முன்னதாக, கொரோனா தொற்று அதிகமாகப் பரவியபோது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 56 மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7 பள்ளிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஒரு பெண் ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் பள்ளிகளை குறிவைத்து கொரோனா தொற்று தாக்கி வருகிறது.

தற்போது, பள்ளிகளிலிருந்தே கொரோனா தொற்று பரவி வருவதால் பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 9 மற்றும் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகும், மாணவர்களைப் பள்ளிக்கு வரவைத்து, கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அ.தி.மு.க அரசு.

தமிழகத்தில் பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்னும் பள்ளிகளை மூடாமல் ஏன் அ.தி.மு.க அரசு காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “69% இடஒதுக்கீட்டில் மாநிலங்களின் அதிகாரத்தை தடுக்கக் கூடாது” : மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி ஆவேசம்!