Tamilnadu
அ.தி.மு.க அமைச்சர் தூண்டுதலின்பேரில் மிரட்டல்... நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது என மனு!
அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று புகார்தாரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த பக்கிரிதக்கா கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மற்றும் ஆதிகேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சனை இருந்துவந்தது. இதுதொடர்பாக சாமிக்கண்ணு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவித கட்டிடம் கட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார். ஆனால் அமைச்சர் கே.சி.வீரமணி தூண்டுதலின்பேரில், காவல்துறை ஆய்வாளர் பழனிமுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாமிக்கண்ணுவையே மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாமிக்கண்ணு, திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் காவல்துறை ஆய்வாளர் பழனிமுத்து மீது நடவடிக்கை எடுத்து, சிறை தண்டனை விதிக்க வேண்டுமென நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது புகார்தாரரான சாமிக்கண்ணு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சாமிக்கண்ணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அமைச்சர் கே.சி.வீரமணி தூண்டுதலின்பேரில் காவல்துறை ஆய்வாளர் தங்களை மிரட்டி வருவதாலும், அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டு அமைச்சரே நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாலும், அமைச்சர் வீரமணி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!