Tamilnadu
ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை... மனநலம் பாதிக்கப்பட்டு பாட்டியை அடித்துக் கொன்ற உளுந்தூர்பேட்டை இளைஞன்!
உலகம் முழுவதும் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பல இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து கொள்ளை, கொலை போன்ற குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஆன்லைன் விளையாட்டு இளைய சமுதாயத்தையே சீரழித்து வருகிறது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டு, பாட்டியைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன் ஹரிஹரன். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நேரடி வகுப்புகள் நடைபெறாததால் ஆன்லைனில் படித்து வந்திருக்கிறார் ஹரிஹரன். இதனால் வகுப்பு நேரம் போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி உள்ளார்.
சில நாட்களாக ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதைக் கவனித்த பெற்றோர், அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஹரிஹரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர் ஹரிஹரனை உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்து வந்துள்ளனர். மேலும் சில நாட்களாக ஹரிஹரன், தான் தான் கடவுள் என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, பாட்டியின் உடல் மீது உட்கார்ந்து தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காகப் பாட்டி தலையிலும், நெஞ்சிலும் பெரிய பெரிய கல்லால் தாக்கியதில் பாட்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாட்டியின் முதுகில் அமர்ந்திருந்த ஹரிஹரன் நான் கடவுள் என்றும் கடவுள் சொன்னதால் பாட்டியைக் கொன்றேன் என்றும் கூறியுள்ளார். யாராவது அருகில் வந்தால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் பீதியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரிஹரனைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட பேரன், பாட்டியைக் கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!