Tamilnadu

2016ல் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாது மக்களை ஏமாற்றிய ஆட்சி : காற்றில் கரைந்த அ.தி.மு.க வாக்குறுதிகள்!

அ.தி.மு.க. சார்பில் 2016ம் ஆண்டு தேர்தலின் போது அறிவித்த அறிவிப்புகளில் பல இன்னும் நடைமுறைக்கு வராமல் காற்றில் பறக்கவிட்ட நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலுக்காக பல புதிய, செயல்படுத்த முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதுவே இன்னும் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதிலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. 5 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் வழங்கப்படவில்லை.

* 2021ம் ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாஷிங்மெஷின் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தரமில்லாமல் வழங்கிய மிக்சி, கிரைண்டரை நினைவுபடுத்துவதாக மக்கள் கிண்டலாக கூறினர்.

* வங்கிகளில் கல்வி கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்வி கடனை அரசே திரும்ப செலுத்தும் என்று 2016ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. தற்போது, 2021ல் கல்வி கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, மாணவர்களை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்கிறது.

* 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 60 வயதை கடந்த முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் முதியோர்களுக்கு 10 டோக்கன் வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களில் 10 ஆண்டுகள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடிவரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அப்போது, தே.மு.தி.க. தலைவர் அறிவித்தபோது, அ.தி.மு.கவினரே கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோகம், மானியம் வழங்குவது அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசு எப்படி வழங்க முடியும் என்று தெளிவாக கூறப்படவில்லை.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு இலவசம். இதுவும் தரமில்லாத மிக்சி, மின்விசிறி வழங்கியது போன்றதுதான் என்கின்றனர் மக்கள்.

* 2016ல் பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்கள் யாரும் பணம் பெற்றதாக தகவல் இல்லை. 2021ல் அம்மா ஆட்டோ திட்டத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2016 தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை அ.தி.மு.க. இதுவரை கண்டு கொள்ளவில்லை.

* 2016ல், தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 5 ஆண்டு முடிந்தபிறகு, படிப்படியாகதான் மூடுவோம் என்று கூறினோம். 5 ஆண்டில் மூடுவோம் என்று கூறவில்லை என்றனர். மதுக்கடைகளை மூடுவதற்கு பதிலாக எலைட் மதுக்கடைகளை திறந்து மது விற்பனையை அதிகரித்துள்ளதுதான் அ.தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டு கால சாதனை ஆகும்.

Also Read: உலக அளவில் கலைஞர் அரசு பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்! : மகுடம் சூடிய தி.மு.க -1

* தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும். நீடித்த, நிலையான, கரும்பு உற்பத்தி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தோட்டக் கலை மற்றும் மலை பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதிசெய்யப்படும். தரமான இடு பொருட்கள் கிடைக்க வழிசெய்யும் வகையில் சிறப்பு நோக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுழல் நிதி அதிகரிக்கப்பட்டு இதன் சேவை விரிவாக்கப்படும் என்று 2016 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இது அறிவிப்போடு நிற்கிறது.

* ரூ.800 கோடியில் தென்னங்கன்று நடவு திட்டம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். தென்னை விவசாயிகளின் வருவாய் பெருக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 2016ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை.

* விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்க செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் கணினி மயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும். விளை பொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த ‘எஸ்.எம்.எஸ்.’ சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் 2016ல் கூறப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு பதில் மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து விவசாயிகளுக்கு எதிரான நிலையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

* நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும். சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

* ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதி சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று 2016ல் கூறப்பட்டது. இது யாருக்கும் வழங்கப்படவில்லை.

2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், ஏழை,எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதி சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிக் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி 2016ம் ஆண்டு அறிவித்த திட்டங்களே செயல்பாட்டுக்கு வராமல் இருக்கும் நிலையில், 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் செயல்படுத்த முடியாத பல திட்டங்களை அ.தி.மு.க. அவிழ்த்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: எதிலும் முதன்மை... கலைஞர் ஆட்சியின் சாதனைகளும் சீரிய திட்டங்களும்! : மகுடம் சூடிய தி.மு.க -2