Tamilnadu

சென்னை,கோவை நகரங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 400க்கும் கீழ் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.

தற்போது மீண்டும், தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொற்று அதிகரித்து வருவதையடுத்து நேற்று தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து கொரோனா பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றே தற்போது பரவி வருவதாகவும், புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றால் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

தற்போது அரசியல் பிரசார கூட்டங்களில் மக்கள் அதிக அளவு பங்கேற்பதால், நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஆனால், அதேநேரம் மக்கள் முன்னெச்சரிக்கையின்றி அலட்சியமாக இருக்க வேண்டாம்" என்றும் தெரிவித்துள்ளார்.