Tamilnadu

போலி ஆவணம் தயாரித்து காலி மனை மீது கடன் வாங்கிய கில்லாடிகள்: உச்சத்தில் பத்திரப்பதிவு துறையின் அலட்சியம்!

சென்னை கேளம்பாக்கம் கரூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மதுமதி. இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரிடமிருந்து சிற்றம்பாக்கம் பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை அசல் ஆவணம் போல போலி தாய் பத்திரத்தை தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்து போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தி சசிகுமார் என்பவருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதேபோல் அந்த ஆவணத்தை நெப்போலியன் என்பவருக்கு அதே ஆண்டில் கிரையம் செய்து கொண்டது போன்று சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2016ஆம் ஆண்டு சேலையூர் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து போலியான ஆவணங்களையும் அடையாள அட்டையை வைத்து ஆள்மாறாட்டம் செய்து குரோம்பேட்டை பாரதிபுரம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு பொது அதிகார ஆவணம் ஏற்படுத்தி கொண்டது போன்று சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆவணம் தயாரித்து, அதே ஆண்டு அந்த இடத்தை நெப்போலியன் என்பவர் கிரையம் செய்து கொடுப்பது போன்ற ஆவணங்களை தயார் செய்து இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அந்த ஆவணத்தில் குமார் மற்றும் அப்துல்காதர் ஆகிய நபர்கள் சாட்சிகளாக கையொப்பமிட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சசிகுமார் மற்றும் அண்ணா நகர் பார்க் ரோடு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்தவுடன் மேற்கொண்ட விசாரணையில் அப்துல் காதர் என்பவர் பல ஆவணங்களை போலியாக தயாரித்து அதனை தனக்கு வேண்டிய நபர்கள் மூலம் பத்திர பதிவு செய்து அதன் மூலமாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று வந்ததும் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.