Tamilnadu

"ஆட்சி மாற்றம் உறுதி... மு.க.ஸ்டாலின் முதல்வர்" : அடித்துச் சொல்லும் மக்கள் - நக்கீரன் சர்வே முடிவுகள்!

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை கேள்வி எதுவும் கேட்காமல் ஆதரித்து வந்தது அ.தி.மு.க அரசு.

மத்திய - மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தி.மு.க வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராகியுள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அ.இ.ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.கவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நக்கீரன் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பான்மையினர் தி.மு.கவிற்கு வாக்களிப்போம் எனக் கூறியுள்ளனர். இதுதொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை நக்கீரன் வெளியிட்டுள்ளது. அதில், “தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் பணம், இலவச அறிவிப்புகள், ஆளுந்தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை ஓட்டுகளாக மாறுவது ஜனநாயக விநோதம். அந்த நம்பிக்கையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள 16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெற்ற 12,000 கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி என அறிவிப்பு செய்தார். வேகமாக தாக்கிய புயல்கள், அளவுக்கு அதிகமாக கொட்டித் தீர்த்த மழை, வீட்டிற்குள்ளே முடக்கிப் போட்ட கொரோனா என விவசாயிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தையே அழித்துவிடும். பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு துணை நின்றது. அந்தச் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, போராடும் விவசாய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சிக்கின்றன.

நான் அடிப்படையில் ஒரு விவசாயி என வயலுக்குள் இறங்கி நாற்றுநட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்படியே விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தார். இது போதாது என்று 6 சவரன் வரை அடகு வைத்து பெறப்பட்ட நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் என ஏகப்பட்ட தள்ளுபடிகளைத் தொடர்ந்து அறிவித்தார் எடப்பாடி.

உண்மையில் இந்த தள்ளுபடிகளைத் தமிழக மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? இந்த இலவசங்கள் ஓட்டாக மாறியிருக்கிறதா? என ஒரு பெரிய மக்கள் திரளையே தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகச் சந்தித்து நக்கீரன் ஒரு மெகா சர்வேயை நடத்தியது.

நீங்கள் கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்? கடன் தள்ளுபடியால் இந்த முறை உங்களது வாக்குகள் மாறுமா? என கேள்விகளை மையப்படுத்தினோம். அதில், தமிழகத்தில் உள்ள 40 சதவீதம் விவசாயிகள் நாங்கள் கடன் பெறவில்லை எனத் தெரிவித்தார்கள். மீதமுள்ள 60 சதவீதம் பேரை இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் தொடவில்லை. அவர்களின் பதில் வேறு மாதிரி இருந்தது.

"முன்பு ஒரு காலத்தில் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்தோம். இன்று கூட்டுறவு சங்கங்கள் முழுவதும் அ.தி.மு.க.வின் கூடாரமாகவும் அவர்களது கட்சி அலுவலகமாகவும் மாறிவிட்டது. அதனால் கூட்டுறவு சங்கங்கள் அ.தி.மு.க.வினருக்குத்தான் கடன் கொடுத்தது. அந்தக் கடனைத்தான் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருக்கிறார்.

உண்மையான விவசாயிகள் பலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார், மைக்ரோ பைனான்ஸ், கந்துவட்டிக் கும்பல், அடகுக்கடைகள் ஆகியவற்றில்தான் கடன் வாங்கியிருக்கிறோம். எங்கள் நகைகள் அங்குதான் இருக்கின்றன. அதனால் இந்தக் கடன் தள்ளுபடி அறிவிப்பினால் உண்மையான விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. இது தேர்தலுக்காக நடத்தப்படும் கவர்ச்சி நாடகம் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் அறிவிப்பு, நடைமுறைக்கு வரும் முன்பே தேர்தல் அறிவிப்பு வந்ததால், அரசின் தள்ளுபடி அறிவிப்பைச் செயல்படுத்த அதிகாரிகள் தயங்குவதை நாம் தமிழகம் முழுவதும் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடன் தள்ளுபடி உண்மையானதாக இல்லை. அனைத்து வங்கிகளிலும் வாங்கிய கடன்களை எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற குரலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பலன் இல்லாமல் இல்லை.

"கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்' என நாம் கேட்டபோது... பெரும்பான்மையாக 41 சதவீதம் பேர் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாகக் கூறினார்கள். இரண்டு சதவீதம் குறைவாக 39 சதவீதம் பேர் தி.மு.க.விற்கு வாக்களித்ததாகக் கூறி கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவைக் கண்முன்பே கொண்டுவந்தார்கள்.

ஆனால், இம்முறை இலவசங்களை மீறி 50 சதவீதம் பேர் தி.மு.க.விற்கும், 38 சதவீதம் பேர் அ.தி.மு.க.விற்கும் வாக்களிக்கப் போவதாக தெரிவிக்கிறார்கள். கமலுக்கும், சீமானுக்கும் தலா 4 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கும், நோட்டாவு க்கும் தலா 2 சதவீதம் பேரும் வாக்களிப்பதாகச் சொல்கிறார்கள். கருத்து இல்லை என்ற 13% பேரில் பலருக்கும் உள்ளுக்குள் ஒரு கருத்து ஏற்படும். அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும்; மு.க.ஸ்டாலின் முதல்வராவார்” - TimesNow கருத்துக்கணிப்பில் தகவல்!