Tamilnadu

தோல்வி பயத்தால் வேட்பாளரை மாற்றிய அ.தி.மு.க... அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ராம.பழனிசாமியின் ஆதரவாளர்கள்!

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க தங்களின் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பை முடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் பரப்புரை என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில், ராம.பழனிச்சாமியை வேட்பாளராக அறிவித்தது அ.தி.மு.க தலைமை. இதையடுத்து பழனிச்சாமியும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் தேர்தல் பணிகளைத் துவக்கினார்.

இவர், ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இதனால் தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என தொகுதி மக்களிடையே பேச்சு அடிபட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க தலைமை திடீரென நேற்று இரவு பழனிச்சாமியை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தை வேட்பாளராக அறிவித்தது.

இந்த செய்தியை அறிந்த பழனிச்சாமி அதிர்ச்சியடைந்து, தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற கார்களை பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். மேலும், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

பின்னர் அலுவலகத்தில், நுழைந்த பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அறைக்குச் சென்று அவரது இருக்கையையும், மேசையையும் அடித்து நொறுக்கினர். அப்போது அங்கிருந்த அமைச்சரின் மகன் பிரவீன்குமாரை அவரது ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர். இதனால் அவர் தாக்குதலில் இருந்து தப்பினார்.

அமைச்சர் தரப்புக்கும், பழனிச்சாமி தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். அ.தி.மு.கவினர் கட்சி அலுவலகத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்து, பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: தொண்டர்களை மீறி கோவை தெற்கு தாரைவார்ப்பு.. பாஜக அடம்பிடித்த தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்ட அ.தி.மு.க!