Tamilnadu

‘வாட்ஸ்அப் ஃபார்வர்டு’ பெண்ணுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கிய கமல்... கடுமையாக கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பொய்யான தகவலை உண்மை என நம்பியதோடு, யூ-ட்யூப் சேனல் வழியாக அதைப் பரப்பியும் வந்த பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

சென்னை தமிழச்சி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவந்த பத்மபிரியா என்பவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவைக் கலைஞரும், தமிழ் ஆர்வலருமான வெங்கடேஷ் ஆறுமுகம் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இவர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்களை கிண்டல் செய்யும் விதமாக அவ்வப்போது பதிவுகளை இடுவது வழக்கம்.

அந்த வகையில், கி.மு 400ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி சித்தர் போகர் எழுதிய பாடல் எனக் குறிப்பிட்டு,

"சரவணனடி வாழ் அரவும்

விடப்பற் கொண்டு நெளியும்

வெட்டியதை புசிப்பவர் தம்

உடலில் சுவாசம் திணறும்

ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்

உடற் மண்டலம் சிதைந்து

உயிர் போகுமே பறந்து.”

என்ற பாடலையும் அதன் பொருள் என “முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.. உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும். போகர் அந்தக் காலத்திலேயே சீனா சென்று வந்தவர். இந்தப்பதிவை பிளாக் மாம்பா நாகம் போல் அதிவேகமாக ஷேர் செய்யவும்.” என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த கிண்டலை புரிந்துகொள்ளாமல் உண்மையான செய்தி என நம்பி ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். பொய்ச் செய்திகளை பரப்பும் நாளிதழான தினமலர், இந்தப் பதிவை செய்தியில் வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியை பலரும் ஆராயாமல் பரப்பி வந்தனர். அப்படி ஆராயாமல் நம்பியவர்களில் ஒருவர்தான் இந்த பத்மபிரியா. வெங்கடேஷ் ஆறுமுகம் எழுதிய இந்த கிண்டல் பதிவை உண்மையென நம்பி, தானே தேடிக் கண்டடைந்ததுபோல இந்தப் பாடலைப் பாடி தனது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டார்.

வாட்ஸ்-அப் பகிர்வுகளின் உண்மைத்தன்மையை அறியாமல், பொதுமக்களையும் ஏமாற்றிய இவர்தான் மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதி வேட்பாளர்.

பொய்யை நம்பியதோடு, அதை தமிழர் பெருமை என்பதாகக் குறிப்பிட்டு லட்சக்கணக்கானோருக்கு பரப்பிய பெண்ணுக்கு, சீட் கொடுக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read: பா.ஜ.கவின் பேச்சைக் கேட்டு வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த அ.தி.மு.க!? #Election2021