Tamilnadu
“ICU-வில் உள்ள தமிழகத்தை மீட்டு ஆளும் அ.தி.மு.க அரசுக்கு பாடம் புகட்டுவோம்” : தினகரன் தலையங்கம் சூளுரை!
“ஐ.சி.யூ.வில் தமிழகம்” என்ற தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. சிறு, குறு தொழில்கள் சீர்குலைவு, விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் சமூகவிரோத செயல்கள் என பல்வேறு பாதிப்புகள் மக்களை அன்றாடம் அச்சுறுத்துகின்றன. வளர்ச்சி என்ற பொய்யான மாயையை உருவாக்கி, கடந்த கால நிகழ்வுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பெரும் அளவில் சுரண்டப்பட்டு விட்டன.
இந்த ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த துறையும் வளர்ச்சி அடையவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மந்தமாக நடக்கும் பல்வேறு பணிகளால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. மதுரை உள்ளிட்ட பல இடங்களில் பல கோடிகளில் தேவையில்லாமல் மேம்பாலங்கள் அமைப்பது ஏன்?
அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கில் நவீன உபகரணங்கள் வாங்கியதாக அரசு கூறுகிறது. ஆனால், உபகரணங்கள் எவ்வித பயன்பாடின்றியும் கிடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது ஏன்? பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்தது.
தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பொள்ளாச்சி, நாகர்கோவில் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன. சமீபத்தில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் எந்தளவுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பதற்கு இதுவே உதாரணம்.
குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சியினர் உதவி செய்வதால், குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. படித்தவுடன் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சரியான திட்டமிடுதல் இல்லை.
இதனால் பல லட்சம் பேர் வேலையின்றி பரிதவிக்கின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியாத நிலை உள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் ஊழல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஊழலுக்கு பஞ்சமில்லை. கொரோனா நிவாரணம் உட்பட அனைத்திலும் ஊழல். தமிழகத்தில் ஊழல் தான் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது.
நாள்தோறும் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. முக்கியமாக, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக அரசு தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. உண்மையான கள நிலவரத்தை மறைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி, பொருளாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. மேற்கண்டவற்றில் எதிர்கால திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால், தமிழகம் பாலைவனமாகி விடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். இதற்கான முழு பொறுப்பு மக்களுக்கு உள்ளது. கடந்த கால இன்னல்களை மறந்து விடக்கூடாது. ஐசியூவில் இருக்கும் தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது. தேர்தலில், ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!