Tamilnadu
சென்னை துறைமுகத்துக்கு ஆபத்து : கடலை கபளீகரம் செய்ய முயலும் மோடி, அதானி - கொந்தளிக்கும் மீனவர்கள்!
2015 சென்னைவாசிகள் மறக்க நினைக்கும் ஆண்டு. வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்து உயிர்பிழைத்தவர்கள் மனதில் பதிந்த வடு மறைய ஆண்டுகள் பல ஆகும். அந்த பேரழிவுக்கு காரணம் ஆளும் அதிமுகதான். செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்து ஊரையே மூழ்கடித்தது, ஜெயலலிதா அரசால் அரங்கேற்றப்பட்ட மாபெரும் துன்பியல் நிகழ்வு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்வதுதானே இயல்பு. மக்களுக்கு துன்பம்... அதுவே லட்சியம் என்ற குறிக்கோளுடன் மக்கள் நல விரோத திட்டங்களை முன்னெடுப்பதில் முன்னோடியாக திகழ்கிறது எடப்பாடி அரசு. பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி நிறுவனத்தோடு கைகோர்த்து சென்னையை ஆண்டுக்காண்டு மூழ்கடித்து நகரையே அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
கப்பல் கட்டும் விசாகப்பட்டினத்துக்கு போட்டியாக சென்னையில் கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க எல் மற்றும் டி நிறுவனம் முன்வந்தது. அந்த நிறுவனத்துக்கு எண்ணூர் துறைமுகத்துக்கு வடக்கே 8 கி.மீ தூரத்தில் காட்டுப்பள்ளி என்று இடத்தில் 1,143 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தால்(டிட்கோ) 99 ஆண்டு குத்தகைக்கு தரப்பட்டது. கப்பல் கட்டும் தளம் என்பதால் அதன் சொந்த தேவைக்கான சிறிய துறைமுகம் ஒன்றை அமைக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. ரூ.3,989 கோடி முதலீடு திட்டப்பணிகளை மேற்கொண்டது எல் மற்றும் டி நிறுவனம்
இந்த குட்டி துறைமுகம்தான் இன்றைக்கு சென்னைக்கே எமனாக உருமாறவிருக்கிறது. 2014ல் மத்தியில் பாஜ ஆட்சியை பிடித்ததும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி நிறுவனம் ராக்கெட் வேகத்தில் புதுப்புது தொழில்களில் கால் பதித்தது. அதில் முக்கியமானது துறைமுகங்கள். அதானியின் வசதிக்காகவே சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவிலுள்ள 12 துறைமுகங்கள் மற்றும் 1,208 தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
அதுவரை குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தை மட்டும் நடத்திவந்த அதானி குழுமம் 2014க்கு பிறகு வாங்கிக் குவித்த துறைமுகங்கள் 10. நாடு முழுவதும் உள்ள சிறு துறைமுகங்களை நடத்தி வந்த பல நிறுவனங்கள் தங்கள் துறைமுகங்களை அதானிக்கு அடுத்தடுத்து விற்றன. இதற்கான காரணம் என்ன என்பதை சொல்லி தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.அதில் ஒன்றுதான் காட்டுப்பள்ளி எல் மற்றும் டி துறைமுகம். கப்பல் கட்டும் தளம் எல் மற்றும் டி வசமிருக்க குட்டி துறைமுகத்தை மட்டும் 2018 ஜூலையில், அதானி போர்ட்ஸ் நிறுவனம் ரூ.1950 கோடிக்கு வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.
வாங்கியதுமே, இந்த காட்டுப்பள்ளியை மிகப்பெரிய துறைமுகமாக மாற்றுவோம் என்று அதானி குழுமம் அறிவித்தது. மத்தியில் மோடியும், தமிழகத்தில் எடப்பாடியும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தால் அதானிக்கு இந்த திட்டம் எல்லாம் வெறும் தூசுதானே. ஏற்கனவே உள்ள 336 ஏக்கர் நிலம் தவிர துறைமுக விரிவாக்கத்துக்கு மொத்தம் 5780 ஏக்கர் நிலம் தேவை என்று கணக்கு கூறுகிறது அதானி நிறுவனம். அதில், 1,882 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு சொந்தமானது என்ற தகவலையும் அவர்கள் கூறுகிறார்கள். தனியார் நிலம் 1930 ஏக்கர் தேவையாம்(இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கப்போகிறார்களோ தெரியவில்லை) இது போதாதென்று கடலில் 6 கி.மீ.க்கு பாறைகள், மண் கொட்டி 1967 ஏக்கர் பரப்பளவு தளம் உருவாக்கப்போகிறார்கள்.
விரிவாக்கம் செய்வதற்காக, சுற்றுசூழல் துறையின் தடை இன்மைச் சான்று கேட்டு, அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்திற்கு காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரப் பொதுமக்கள், மீனவர் குடும்பங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காட்டுப்பள்ளி கடல், சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான பகுதி ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகள் அதிகம் கிடைக்கின்றன.
கடலில் மண் கொட்டி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து, ஆபிரகாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிக்குப்பம் உள்ளிட்ட 82 தமிழக, ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரி, காட்டுப்பள்ளிக்கு வடக்கில் அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகம், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் உள்ளதால், இது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான் “வடிகாலாக்” செயல்பட்டு வெள்ளத்தில் இருந்து சென்னையை குறிப்பாக வடசென்னையை காக்கின்றன. கொசஸ்தலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே, சில கிலோமீட்டர் நீளத்திற்கு இருந்த கடற்கரை, எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாக, தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கி விட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கி.மீ. தூரமே எஞ்சி உள்ள இந்நிலையில், இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்து விட்டன. காட்டுப்பள்ளி துறைமுகம் 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போய்விடும். பழவேற்காடு பகுதி கடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும்.
இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குப் பாதிக்கும். ஒரு லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமானால் எங்களுக்கென்ன? சென்னையே வெள்ளத்தில் மூழ்கினால் என்ன? என்று மக்களுக்கு எதிரான இந்த காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தை அதானி, மோடி, எடப்பாடி கூட்டணி செயல்படுத்த முனைகிறது. இந்தியாவில் நடப்பது மக்களாட்சி என்பது உண்மையானால் மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தேவையற்ற, சட்டவிரோத காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
5 மாதத்தில் 3 துறைமுகங்கள் வாங்கி குவிப்பு
அதானி போர்ட்ஸ் நிறுவனம் கடந்த 5 மாதத்தில் ரூ.14,659 கோடிக்கு 3 துறைமுகங்களை வாங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் 75 சதவீத பங்குகள், கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் திகி துறைமுகம், இம்மாதம் 3ம் தேதி ஆந்திராவின் கங்காவரம் துறைமுகத்தில் 31.5 சதவீத பங்குகள் என்று வாங்கி குவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவின் துறைமுக வழி சரக்கு கையாள்தலில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 30 சதவீதமாக உயர்த்துள்ளது.
பழவேற்காட்டின் இயற்கை வளம் அழியும்
கடலும், பழவேற்காடு ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தின் வழியாக, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும்; அடுத்த, ஆறு மணிநேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். கடல் வாழ் உயிரினங்கள், நீர் ஏற்றத்தின் போது, ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இங்கு இயற்கையாக நடக்கும் நிகழ்வு. இதனால் இப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள் ஆகியவை உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கிறது. இங்கு, நூற்றுகணக்கான பறவை இனங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே துறைமுக விரிவாக்கத்தால் அழியும்.
தேர்தல் அறிவிப்புக்கு முன் அவசரமாக அனுமதியளித்த ஜெயலலிதா அரசு
காட்டுப்பள்ளி துறைமுகத்தை விற்க எல் அண்ட் டி நிறுவனம் கடந்த 2015ல் திடீரென முடிவு எடுக்கிறது. இதற்காக காட்டுப்பள்ளி துறைமுகத்தையும், கப்பல் கட்டும் தளத்தையும் 2 கம்பெனிகளாக பிரிக்க வேண்டும், இதற்கு தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும். அதற்குள் 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகிறது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்ற தகவல் வெளியானதும், இதற்காக, காய்களை அவசரம் அவசரமாக நகர்த்த துவங்குகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் அரசு அனுமதி அளித்தது.
* பெரிய துறைமுகங்கள் 3
* சென்னை எண்ணூர், தூத்துக்குடி சரக்கு கையாளும் திறன்
* 25.39 கோடி மெட்ரிக் டன்(ஆண்டுக்கு)
* காட்டுப்பள்ளி துறைமுக திறன் (விரிவாக்கத்துக்கு பிறகு) 32 கோடி மெட்ரிக் டன்
* கடந்த 2019-20ல் கையாண்ட சரக்குகள் 11.44 கோடி மெட்ரிக் டன்
* பயன்பாடு 45%
* ஈ ஓட்டும் தமிழக துறைமுகங்கள் இந்த மெகா விஸ்தரிப்பு தேவையா?
தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் ஆண்டுக்கு 25.39 கோடி டன்கள் சரக்குகள் கையாளும் திறன் கொண்டிருக்கிறது. ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் 11.44 கோடி டன் சரக்குகள் தான் கையாளப்பட்டன . 55 சதவீத துறைமுகம் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், காட்டுப்பள்ளியில் மட்டும் ஆண்டுக்கு 32 கோடி டன் சரக்குகள் கையாளும் வகையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுவது எதற்காக? என்ற கேள்வி எழுகிறது.
சென்னை துறைமுகத்துக்கு ஆபத்து
காட்டுப்பள்ளி துறைமுக திட்டமே சென்னை துறைமுகத்தை அழிப்பதற்காகத்தான் என்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டு பின்னர் ஜெயலலிதா முதல்வரானதும் நிறுத்தப்பட்ட மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்போவதாக மத்திய அரசும் சொன்னது, மாநில அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், இன்றுவரை அதற்கான பணிகள் எதுவும் கடந்த 4 ஆண்டுகளில் துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாமே அதானிக்காகதான்
* சென்னை புறநகரைச்சுற்றி அமைக்கப்படும் அதிவேகப் பயணத்துக்கான வட்டப்பாதை நெடுஞ்சாலை (High Speed Circular transport Corridor),
* சென்னை தொடங்கி பெங்களூருவரை அமைக்கப்பட இருக்கும் தொழில் வளாக நெடுஞ்சாலைத் திட்டம் (Chennai - Bengaluru Industrial Corridor)/
* மாமல்லபுரம் தொடங்கி எண்ணூர் வரை 133 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்னை எல்லை சாலை(Chennai Peripheral Road).
* பொன்னேரியில் அமைய உள்ள தொழில் முனையம்.
* அதானி கட்டுப்பாட்டில் 11 துறைமுகங்கள்'
முந்த்ரா, தாஹேஜ், ஹஸிரா, காட்டுப்பள்ளி, தம்ரா, விழிஞ்சம், திகி, ஆகிய துறைமுகங்களும், மர்மகோவா, விசாகப்பட்டினம், எண்ணூர், டூனா ஆகிய துறைமுகங்களில் முனையங்களையும் அதானி குழுமம் நடத்துகிறது.
99 ஆண்டு குத்தகைக்கு விவசாய நிலங்கள் தாரைவார்ப்பு?
காட்டுப்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தொழில் திட்டங்களுக்காக அடிமாட்டு விலைக்கு விளை நிலங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதுபோதாது என்று சென்னை- பெங்களூரு தொழில் வளாக நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியான பொன்னேரி தொழில் முனையத்திற்காகவும் அந்தப் பகுதியில் ஏராளமான நிலத்தை ஆர்ஜிதம் செய்கிறது.
அதானி துறைமுகத்துக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியபோது, அப்பாவி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.29 ஆயிரம் வரைதான் கிடைத்தது. ஆனால், அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு பல கோடி ஆகும். இந்த நிலங்களை மலிவு விலைக்கு 99 ஆண்டு குத்தகைக்கு அரசு தந்துள்ளது. அந்த வகையில், இப்போது அரசிடம் இருந்து 1,882 ஏக்கர் நிலத்தை குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுக்க அதானி நிறுவனம் காய் நகர்த்தி வருகிறது.
கேரளாவிலும் சர்ச்சை
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ரூ.7,500 கோடி செலவில் புதிய துறைமுகத்திற்கு அதானி நிறுவனம் அடிக்கல் நாட்டியது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி விழிஞ்சம் பகுதி மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். நிலத்தின் உரிமையாளர்களும் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு கேட்ட தொகையை விட அதானி குழுமம் கூடுதல் பணம் வழங்கியது. ஒப்பந்தத்தின் படி 2019ம் ஆண்டில் முதல் கட்டப் பணிகள் முடிவடைய வேண்டும். ஆனால் இதுவரை முதல்கட்டப் பணிகள் நிறைவடையவில்லை.
டாப் கியரில் இணைப்பு சாலை திட்டம்
காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், தமிழகத்துக்கு ஆரம்பித்தது சனியன். நீண்ட காலமாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த சென்னை எல்லை சாலைத்திட்டப்பணிகள் திடீரென வேகமெடுத்தது. மாமல்லபுரம் பூஞ்சேரியில் துவங்கி சிங்கப்பெருமாள் கோவில், திருப்பெரும்புதூர், திருவள்ளூர், தச்சூர் வழியாக அதானி துறைமுகத்தை இணைக்கும் இந்த சாலைக்கு நிலம் எடுப்பு பணிகள் திடீரென ஜரூராக நடந்தன. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த விளை நிலங்கள் அடித்து பறிக்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது டாப் கியரில் பறக்கிறது. சேலம் சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டமும், சேலம் பகுதியில் இருந்து கனிம வளங்களை அதானி துறைமுகத்துக்கு கொண்டு வர போடப்பட்ட திட்டம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
அடுத்த குறி கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க தனியார் விண்ணப்பிக்கலாம் என கடந்த வாரம் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் அறிவித்துள்ளது. இந்த திட்டமும் அதானிக்கு போகும் என்று கூறப்படுகிறது. இது மீனவர்கள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் பாதிக்கிற திட்டமாகும். கடலுக்கு அடியில் 3 கோடி டன் வரை பாறைகள் உடைக்கப்பட வேண்டும். அவ்வாறு உடைக்கப்படும் போது என்ன நிகழும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். தற்போது தூத்துக்குடி துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நன்றி தினகரன்
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!