Tamilnadu
“நாங்க தான் பெஸ்ட்” என காட்ட BSNL இணைப்பைத் துண்டித்த தனியார் நிறுவன ஊழியர் !
சென்னை அடுத்துள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சமீப காலமாக பி.எஸ்.என்.எல் சேவையில் தடை ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் புகார் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் சேவையைச் சரி செய்துக் கொடுத்துள்ளனர். ஆனால், மீண்டும் இணைப்பு தடை தொடர்ந்து ஏற்பட்டதால், மீண்டும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இப்போது தானே சரி செய்தோம் ஏன் திரும்பவும் அதே இடத்திலிருந்து புகார் வருகிறது என பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொரட்டூர் பி.எஸ்.என்.எல் ஊழியர் அப்பன்ராஜ், வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் 31ம் தெருவில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புப் பெட்டியை ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது, ஒருவர் அந்த இணைப்பு பெட்டியைத் திறந்துவைத்துக்கொண்டு, இணைப்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பன்ராஜ், அந்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது இவரின் கேள்விக்கு அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பன்ராஜ் அவரை பிடித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த நபர் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்றும், ஏர்டெல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், பி.எஸ்.என்.எல் இணைப்புகளைத் துண்டித்து, ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துவிட்டால் இணைய வேகம் மிகவும் அதிகமாக இருக்கும்.
எந்த பிரச்சினையும் வராது பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்தின் பக்கம் இழுத்து வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், அந்த நபரிடம் இருந்து போன் மற்றும் இணைப்பைத் துண்டிக்கப் பயன்படுத்திய சாதனங்களை போலிஸார் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவன ஊழியரின் இத்தகைய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!