Tamilnadu

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதா அ.தி.மு.க அரசு?

சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கொடூரமாக இருந்தது. வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மகராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், "புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி 100 க்கும் மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதனால் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மும்மரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் சுகாதாரத்துறை மெத்தனமாகச் செயல்படுவதை விடுத்து, கொரோனா பரவாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அதிமுக அரசு.. விமான நிலையத்தில் எடப்பாடி போஸ்டரை அகற்றாத ஆளுங்கட்சி!