Tamilnadu

“எதுக்கு இந்த வெட்டி பந்தா?” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயங்கும் ரோட்டரி அமைப்பு ஒன்று ‘PAUL HARRIS FELLOW’ என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்துள்ளதாக அ.தி.மு.கவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம், நோய்த் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொள்கின்றனர்.

ஆனால், ரோட்டரி குழுமத்துக்கு 1,000 டாலர்களுக்கு அதிகமாக யார் நன்கொடை அளித்தாலும் வழங்கப்படும் விருது இது. நீங்கள் ஆயிரம் டாலர் அளித்தாலும் உங்களுக்கு இந்த விருது கிடைக்கும் என்கிற தகவல் இணையத்தில் கிடைக்கிறது.

இதுவரை பல லட்சக்கணக்கானோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். 2006-ஆம் ஆண்டிலேயே 10 லட்சம் பேருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் 2005-ஆம் ஆண்டில் இதே விருதை வாங்கியிருக்கிறார். அவரது வழியிலேயே ஆயிரம் டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து, ஊழல் செய்வதில் மட்டுமே சாதனை படைத்துவரும் எடப்பாடி பழனிசாமியின் இமேஜை உயர்த்த அ.தி.மு.கவினர் இப்படி பணம் கொடுத்து விருது பெற்று விளம்பரப்படுத்தி வருவது மக்கள் மத்தியில் வேடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Also Read: நக்கலடித்த சுதிஷ்... கழட்டி விடப்பட்டாரா விஜயகாந்த்? - பா.ம.க தேர்தல் அறிக்கையில் சூசக அறிவிப்பு!