Tamilnadu

“தடுப்பூசி சேவையை எக்காரணம் கொண்டும் வர்த்தக நோக்கில் அணுகக்கூடாது” : தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்!

‘‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்பதை இலக்காக கொண்டு, சேவை மனப்பான்மையுடன் தனியார் மருத்துவமனைகள் இயங்கவேண்டும் என வலியுறுத்தி, வர்த்தக நோக்கம் கூடாது என்ற தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

உலகம் முழுவதும் ஈவுஇரக்கமின்றி மனித உயிர்களை கொத்து கொத்தாக சாய்த்த கொரோனாவை ஒழிக்க, நம் நாட்டில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இவை, இந்தியா மட்டுமின்றி, 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட நாடுகள் நம் நாட்டின் இந்த தடுப்பூசிக்காக காத்திருக்கின்றன.

இந்த தடுப்பூசிகள், கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நம் நாட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 12,500 தனியார் மருத்துவமனை உள்பட மொத்தம் 27 ஆயிரம் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்த இந்த தடுப்பூசி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள, மாநில அளவில் மற்றும் யூனியன் பிரதேசம் அளவிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா (ஏ.பி.-பி.எம்.ஜே.), மத்திய அரசின் சுகாதார திட்டம் (சி.ஜி.எச்.எஸ்.) மற்றும் மாநில சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகிய மூன்று அமைப்புகளுடன் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சென்னையில் 34 தனியார் மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் ஒருபடிமேலே சென்று, இந்த 3 அமைப்பிலும் இடம்பெறாத தனியார் மருத்துவமனைகளுக்கு, மாநில அரசுகள் அனுமதி அளிக்கலாம் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

போதுமான அளவு சுகாதார ஊழியர்கள், இடவசதி, குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்புகளை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த அனுமதியை, மாநில அரசுகளே வழங்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவசியமின்றி தடுப்பூசிகளை சேமித்து வைக்காமல், மக்களுக்கு உடனுக்குடன் தடுப்பூசிகளை போட வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, தனியார் மருத்துவமனை என்றாலே காசு கறக்கும் மையம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சத்தை நீக்கி, மத்திய - மாநில அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பாக தடுப்பூசி போட வேண்டியது தனியார் மருத்துவமனைகளின் கடமை. உயிர் காக்கும் இந்த உன்னத சேவையை, எக்காரணம் கொண்டும், வர்த்தக நோக்கில் அணுகக்கூடாது.

‘‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்பதை இலக்காக கொண்டு, சேவை மனப்பான்மையுடன் தனியார் மருத்துவமனைகள் இயங்கவேண்டும். நயாபைசா செலவின்றி, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குகிறோம். இதன்மூலம், போலியோ நோயை நம் நாட்டில் இருந்து அடியோடு விரட்டி விட்டோம். அதேபோல், கொரோனா தடுப்பூசி போடுவதின் மூலம், கொரோனா என்னும் நச்சுக்கிருமியை அடியோடு ஒழிக்கவேண்டும். இதற்கு, தனியார் மருத்துவமனைகள் காவல் அரணாக, துணை நிற்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: “கஜானாவை அழித்து துடைத்துவிட்டு சத்தமில்லாமல் வெளியே செல்லப்போகும் எடப்பாடி பழனிசாமி” - தினகரன் தலையங்கம்