Tamilnadu

காவல்நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : பதறிப்போன காவலர்கள் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் எஸ்.ஐ பழனி. இவர் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் சேர்ந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாதனூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, துப்பாக்கிகளை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ-கள் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் காவலர்கள் கொடி அணி வகுப்பு முடிந்து, துப்பாக்கிகளை ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எழுத்தர் சேதுராமனிடம் ஒப்படைத்தனர். அப்போது, தவறுதலாக துப்பாக்கி வெடித்தது. இதனால் காவலர்கள் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், எஸ்.ஐ பழனி கொடிநாள் நிகழ்ச்சிக்காக துப்பாக்கியை எடுத்துச் சென்று, மீண்டும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தார். பின்னர் காவல் நிலைய எழுத்தர் சேதுராமனிடடம் வழங்கினார். அப்போது சேதுராமன் துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை எடுக்க முயன்றபோது, கை தவறுதலாக பட்டு துப்பாக்கி வெடித்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.