Tamilnadu

“ஆதாரங்களை காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம்” : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளதாகவும், அதற்காக குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், பணத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்களை காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் சொல்லலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம், சோதனைகள் நடத்தலாம் எனவும், ஒட்டுமொத்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உரிய ஆதாரங்களை காட்டி, 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனவும், ஆதாரங்கள் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.

Also Read: நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. கொரோனாவை தொடர்ந்து புதிதாக முளைத்துள்ள பர்வோ வைரஸ் - அச்சத்தில் மக்கள்!