Tamilnadu
“விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்ன?” : பதறவைத்த நிமிடங்களை விளக்கும் தொழிலாளி!
விருதுநகர் மாவட்டம், அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவிரி 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த அடுத்தநாளே மற்றொரு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடி விபத்து அதிர்ச்சியில் இருந்து விருதுநகர் மக்கள் மீண்டு வருவதற்குள்ளேயே, நேற்று முன்தினம் காளையார்குறிச்சி பகுதியிலுள்ள தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடி விபத்திற்குப் பட்டாசு ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என வெடி விபத்தில் சிக்கி உயிர் தப்பிய முத்துராஜ் என்ற தொழிலாளி தெரிவித்துள்ளார். இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "பட்டாசு தயாரிக்கும் பணியில் நாங்கள் கவனமாக ஈடுபட்டிருந்தோம். ஆலையில் உள்ள அறைகளைச் சுற்றி கோரைப் புற்கள் உயரமாக வளர்ந்து இருந்தன. அதை அறுப்பதற்காகப் புல் அறுக்கும் எந்திரம் கொண்டு, புற்களை அறுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, புற்களுக்குள் இருந்து சிதறிய கற்கள் உலர்த்த வைக்கப்பட்டிருந்த முனை மருந்தின் மீது விழுந்தது. அப்போது கண் இமைக்கும் நொடியில் இந்த கோர வெடி விபத்து நிகழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் என் இடுப்பு பகுதியிலிருந்து கால் வரை தீக்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர்.
பட்டாசு ஆலை பகுதியில் காய்ந்த புற்கள் அதிகமாக இருக்கக் கூடாது. அதை முறையாகப் பராமரித்து வெட்ட வேண்டும். இந்த வேலையை விடுமுறை நாட்களில் தான் செய்ய வேண்டும். ஆனால், இங்கு அதிகமான புற்கள் வளர்ந்தும் அதை ஆலை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது புற்களை வெட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்குப் பட்டாசு ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும் மூன்று பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு கிடைத்து வந்த சொற்ப வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இப்படி விபத்துகள் நடக்கும்போது எல்லாம் அரசாங்கம் நிவாரண தொகை கொடுக்கிறதே தவிர, இது போன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருப்பதற்கான எந்த முன் முயற்சிகளையும் எடுக்காமல் இருந்து வருவதாகப் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!