Tamilnadu
“கடந்த 10 ஆண்டுகளில் 161 பட்டாசு ஆலை விபத்துகள் - 316 பேர் உயிர்பலி” : அதிமுக அரசின் அலட்சியம் அம்பலம் !
சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்துக்கள் குறித்து இதுவரை நடைபெற்ற விபத்துகளிலிருந்து அரசு எவ்வித பாடங்களையும் கற்கவில்லை. விபத்துகளைத் தடுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எந்த பார்வையும் இல்லை என சி.பி.ஐ.எம் கட்சியின் சிவகாசி ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில், படித்த இளநிலை பட்டதாரி பெண். கடந்த ஆண்டு தான் காதல் திருமணம் செய்துள்ளார். கர்ப்பிணியான அவர், குடும்பம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் தனக்கு பிறக்குப் போகும் குழந்தையை பற்றி எண்ணற்ற, ஆசைகளும், கனவுகளும் இருந்திருக்கும். தன் மனதிற்குள்ளே பேசி பேசி மகிழ்ச்சியடைந்தது அந்த குழந்தைக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் பட்டாசு வெடி விபத்தில் வெந்து மடிந்து போனது பெரும் துயரமல்லவா? சாத்தூர் அருகேஅச்சம்குளம் என்ற கிராமத்தில் பட்டாசு வெடி விபத்து நடந்த அன்று தான் கற்பகவள்ளி வேலைக்கு சென்றுள்ளார். தாய் வீட்டில் வேலைக்கு போக வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் குடும்ப கஷ்டம், வேறு வழியில்லை. வேலைக்கு போன அன்றே வெந்துமடிந்தார், 7 மாத சிசுவை சுமந்த படியே.
அதேபோல் பாக்கியராஜ், செல்வி ஆகிய இருவரும் கணவன், மனைவி. அவர்களின் குழந்தை நந்தினிக்கு வயது (12). இந்த கொடூர பட்டாசு வெடி விபத்தில் நந்தினியின் தாய் தந்தையரும் கரியாகிப் போனார்கள். நந்தினியோ தாய் தந்தையின்றி தவிக்கிறாள். இந்த சிறு வயதில் எத்தனை துயரம். இந்த பிஞ்சுக் குழந்தை நந்தினியின் மனது என்ன பாடுபடும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
விபத்தின் போது காயமடைந்த பெண் தொழிலாளி மாலா (30). மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ஒரு வாரம் கழித்து இறந்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் அண்ணா நான் பிழைச்சுக்குவேன்ல, என் இரண்டு பொம்பள பிள்ளைகள நான் காப்பாத்துவேன்ல. சீக்கிரம் சரியாச்சுனா வேலைக்கு போனும்.
சனிக்கிழமை வெடிச்சுருந்தா கூட சம்பளத்தை வாங்கி என் பிள்ளைக கிட்ட கொடுத்துட்டு செத்துருந்தா கூட, பிள்ளைங்க கஷ்டப்படாம இருந்துருப்பாங்கனு சொல்லி அழுதுள்ளார் மாலா. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், இந்த குடும்பத்தின் வறுமையின் உச்சத்தை. இப்படி இறந்து போன தொழிலாளர்கள், தான் செத்து தொலைவதற்காகத் தான் பட்டாசு தொழிலுக்கு வருகிறார்களா? இல்லை. மாலாவின் குடும்பமே சாட்சி.
பிழைக்க வேறு வழியின்றிதான் என்பது அரசுக்கும் தெரியும். வேலை வாய்ப்புகளை கொடுத்து வந்த தீப்பெட்டி, அச்சு போன்ற தொழில்களும் நவீனத்திற்கு மாறி வேலை வாய்ப்புகளையும் பறித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேலை இழப்புகள் ஆகியவை குறித்தெல்லாம் ஆளும் அரசுகள் ஆய்வுசெய்து புதிய தொழில்களை இம்மாவட்டத்தில் கொண்டு வந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? அதுவும் இல்லை.
விபத்துக்கான காரணம் என்ன?
ஒரு பட்டாசு ஆலையை நடத்திட மத்திய, மாநில அரசிடம் உரிமம் பெற்ற ஒருவர் தன்னால் தொழிற்சாலையை நடத்த முடியவில்லை என்பதற்காக உரிமம் பெறாத சில நபர்களுக்கு தனது ஆலையை லீசுக்கு கொடுத்து விடுகிறார்கள். தற்போது விபத்து நடைபெற்ற தொழிற்சாலையின் உரிமம் எடுத்த ஒருவர்தனது பட்டாசு ஆலையை வேறு ஒருவருக்கு லீசுக்கு கொடுக்கிறார். லீசுக்கு எடுத்த ஒருவரோ, பல நபர்களுக்கு லீசுக்கு கொடுத்திருக் கிறார்.
இதுபோன்ற விதிமுறை மீறல்களில் ஒருமிக முக்கியமான காரணம். தற்போது பசுமைதீர்ப்பாயம் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்திட 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு அறிக்கை வெளியிட்ட பிறகேமுழு விபரம் தெரிய வரும். இது ஒரு புறம்.மற்றொன்று குத்தகை சம்மந்தமாக, அதாவது லீசுக்கு எடுப்பது குறித்து சட்ட விதிகள் என்ன சொல்கின்றன என்றால் ஒருவர் பட்டாசுஆலை உரிமம் பெறும் போதே தனக்கு பிறகு யாருக்கு ஆலையின் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரின் பெயரும் குறிப்பிட்டே இருக்கும். அவருக்கு மட்டுமே ஆலையை நடத்திட உரிமை உண்டு.
அதோடு வேறு ஒருவருக்கு ஆலையின் உரிமம் கொடுப்பதாக இருந்தால் மாவட்ட மாஜிஸ்திரேட்டு அவர்களின் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதுபற்றி உரிமையாளர்களுக்கு தெரியும். ஆனால் தெரிந்தே தான் உரிமமே பெறாத ஒருவருக்கு லீசுக்கு விடுகிறார். இதனை தான் கண்காணிக்க அரசுஅதிகாரிகள் தவறி விட்டனர். நேரடியாகச் சென்று தொடர் கண்காணிப்பு நடத்தியிருந்தால் கோர விபத்தும் உயிரிழப்புகளும் நடை பெறாமல் தடுத்திருக்க முடியும்.
விபத்துகள் இன்று தான் நடக்கிறதா?
கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 161 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 316 தொழிலாளிகள் உயிர்ப்பலியாகியுள்ளனர். அதிமுக அரசு சொற்ப நிவாரண உதவிகளை வழங்கி விட்டு, ஆட்சியாளர்கள் இரங்கல் சொல்லி அன்றைய பொழுதை கழித்து விட்டுச் செல்கிறார்கள். இதுவரை நடைபெற்ற விபத்துகளிலிருந்து அரசு எவ்வித பாடங்களையும் கற்கவில்லை. விபத்துகளைத் தடுத்திட, தவிர்த்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் தொழில் குறித்து அறிவியல்பூர்வமான பார்வையும் இல்லை.
சிவகாசியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள 6 தாலுகாவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அத்தனையையும் எப்படி கண்காணித்திட முடியும் என்ற கருத்து தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. வேதிப்பொருட்களை கொண்டு தொழில் செய்யக்கூடிய ஆயிரம் பட்டாசு தொழிற்சாலைகளை தினந்தோறும் ஆய்வு செய்திடுங்கள்.
அதற்கு ஏற்றாற்போல் நிர்வாக ஏற்பாட்டையும், சட்ட விதிகளையும் மாற்றம் செய்யுங்கள் அல்லது மத்திய அரசு அனுமதி கொடுக்கும் ஆலையை மத்திய அரசும், மாநில அரசு கொடுக்கும் அனுமதியை மாநில அரசும் ஆய்வு செய்திடுங்கள், அதை விட வேறு என்ன வேலை சம்பந்தப்பட்ட மத்திய - மாநில அரசுத் துறைகளுக்கு? மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து கொண்டு பல குழுக்களாக சென்று கண்காணிக்கும் வகையில் சட்ட விதிகளை உருவாக்கிட வேண்டும். அது அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடுகள் கூடாது.
மாதந்தோறும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட முழு விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மத்தியஅரசின் துறைசார் அதிகாரிகள், உற்பத்தி யாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சாதக, பாதக அம்சங்கள் குறித்து உடனுக்குடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து, விபத்தில்லா பட்டாசு தொழிலாக மாற்றி தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஆட்சிக்குவந்த காலம் முதலே பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, சின்னச்சின்னத் தொழில்களும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டு பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை கறாராகக் கடைப்பிடித்திட வேண்டும். இலாபம் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படாமல் தொழிலை பாதுகாத்திட தங்களுக்கும் ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.
தொடர் வெடி விபத்தும் உயிரிழப்புகளும் ஏற்படுமானால் பட்டாசு தொழிலுக்கு எதிரான பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்துவார்கள். இதனால் பட்டாசு தொழிலுக்கு எதிரான கருத்துகளுக்கு வலுசேர்த்திட உதவும். எனவே மத்திய, மாநில அரசுகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பட்டாசுத் தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாப்போம்!
- நன்றி தீக்கதிர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!