Tamilnadu

சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் : வளைத்துப் பிடித்த போலிஸ்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 7ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பிறகு, வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிப் பார்த்த அவரது பெற்றோர், சிறுமியை எங்கும் காணவில்லை என்பதால் அடுத்த நாள் மகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணையை துவக்கினர். அப்போது சிறுமியின் செல்போன் எண்ணின் சிக்னல் கோவை தொண்டாமுத்தூர் பகுதியைக் காட்டியுள்ளது. இதையடுத்து, போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேடிப் பார்த்தபோது, சிறுமியை குமார் என்பவர் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, குமாரை கைது செய்து அவரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த குமார், கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும்போது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு சிறுமியிடம், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, கோவை தொண்டாமுத்தூரில் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்னர், இருவரையும் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலிஸார், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த வழக்கு குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல் நிலைய போலிஸார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்வதும், பெண்களைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்வதும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: “ஆட்டோ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க” : மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!!