Tamilnadu

“தமிழக நிதிநிலையை சரிசெய்ய அடுத்து வரும் அரசுக்கு 3 ஆண்டுகள் தேவைப்படும்” - நிதித்துறை செயலர் தகவல்!

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 5% கடன் வாங்கும் தன்மை உள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்கு கடன் வாங்கும் தன்மை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நிதித் துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது 7% அளவிற்கு வீழ்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நிதியாண்டு 2.02% நேர்மறை வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை குறைந்தாலும், அதிகமானாலும் அதற்கு வாங்கப்படும் வரியில் எந்த மாற்றமும் இருக்காது. மாநிலத்தின் வரியால் பெட்ரோல் விலை உயரவில்லை.

மாநில மொத்த கடன் அதிமாகி இருப்பது குறித்த கேள்விக்கு, கடன் அளவு உயரும்போது, பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஓவ்வொரு ஆண்டும் கூடுதல் கடன் வாங்குவது, மாநிலத்தின் ஜி.டி.பி அளவை வைத்து தான் வாங்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் வரம்புக்கு மேல் இன்னும் கடன் வாங்கவில்லை என்றும், ஒரு சில மாநிலங்கள் அவர்களின் வரம்பை மீறி கடன் வாங்கியுள்ள நிலையில், தமிழகம் அதுபோன்று வாங்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

பெட்ரோல் மூலம் கடந்த ஏப் - நவம்பரில் மத்திய அரசுக்கு வரும் வருமானம் 40% அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்திற்கு 38% குறைந்துள்ளதாகவும் இந்த நிதியாண்டைப் பொறுத்தவரை வரி வருவாய், அதேபோல் மத்தியில் இருந்து வரும் நிதி வருவாயும் குறைந்துள்ளதாகவும், தேர்தலுக்கு பின் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகளாவது தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read: அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? - எடப்பாடி - ஓபிஎஸ்-ஐ சாடிய துரைமுருகன்!