Tamilnadu

கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.13,352 கோடி செலவிடப்பட்டதாக அரசு தகவல் : தகரம் அடித்ததற்கு இவ்வளவு செலவா?

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பிறகு எல்லா மாவட்டங்களிலும் பரவியது. கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிவதிலும், அவர்களைத் தனிமைப்படுத்துவதிலும் அ.தி.மு.க அரசு அலட்சியமாகச் செயல்பட்டதால், தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவியது.

இதையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளிலும், லேசான அறிகுறி உடையவர்கள் பள்ளி, கல்லூரிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவால் பாதித்தவர்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குச் சத்தான உணவு கொடுக்காமல், பழைய உணவு, பூச்சி, புழுக்கள் கிடந்த உணவுகள் கொடுக்கப்பட்ட கூத்தும் அரங்கேறியது.

மேலும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துகிறோம் எனக் கூறி வைரஸால் பாதித்தவர்களின் வீடுகளைத் தகரம் கொண்டு அடைத்தது அ.தி.மு.க அரசு. பின்னர் கொரோனால் பாதித்தவர் வீடு என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா பாதித்த தெருக்களை இரும்பு தகரம், கட்டைகளைக் கொண்டு அடைத்தனர். இதனால் அந்த வீதிகளில் இருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்திய பொதுமக்களுக்கு ரூ. 5,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தைக் கூடச் செயல்படுத்தவில்லை அ.தி.மு.க அரசு. போதாக்குறைக்கு மத்திய அரசு வழங்கிய கூடுதல் ரேஷன் அரிசி வழங்குவதில் முறைகேடுகளிலும் ஈடுபட்டது பழனிசாமி அரசு.

இப்படி கேலிக்கூத்தாக செயல்பட்ட அ.தி.மு.க அரசுதான், கொரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் 13 ஆயிரத்து 352 கோடி செலவு செய்ததாக இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இரும்பு தகரம் வைத்து மூடியதற்கும், வீதிகளை கட்டைகள் வைத்து அடைத்ததற்கும், தெருக்களில் ப்ளீச்சிங் பவுடர் கொட்டியதற்குமா ரூபாய்13 ஆயிரத்து 352 கோடியை அ.தி.மு.க அரசு செலவு செய்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “செவிமடுக்காத அ.தி.மு.க அரசு; தி.மு.க ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!