Tamilnadu
பெட்ரோல் வரிமூலம் மோடி அரசுக்கு ரூ.17.8 லட்சம் கோடி வசூல்: தமிழகத்துக்கு கிடைத்த ரூ.87000 கோடி என்னாச்சு?
நாளுக்கு நாள் உயர்ந்து, தினந்தோறும் உச்சம் பெறுகிறது பெட்ரோல், டீசல் விலை. கொரோனாவில் மொத்த சேமிப்பையும் வருமானத்தையும் தொலைத்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைத்து கொண்டு நிற்கின்றனர். கொரோனா சமயத்தில் பொது போக்குவரத்து இல்லாததால், அத்தியாவசிய பணிகளுக்கு வருவோர் மட்டும் சொந்த வாகனங்களை பயன்படுத்தினர்.
அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்ததால், அதை ஈடுகட்ட வரி உயர்த்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த வாகனங்களில் பணிக்கு வர தொடங்கி விட்டனர். இந்த சூழ்நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது. ஏற்கெனவே வருவாய் குறைந்து ‘பட்ஜெட் குடும்பம்’நடத்தும் நடுத்தர மக்கள், மத்திய அரசு போட்ட‘வரி வருவாய் பட்ஜெட்’கணக்கால் கதிகலங்கிப்போய் நிற்கின்றனர். பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் இது பேரிடியாக விழுந்து விட்டது. முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் பகுதியில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல், அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலமாக ‘செஞ்சுரி’அளவை தொட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இதற்கெல்லாம் காரணம் என காரணங்கள் கூறப்பட்டாலும், வரியை குறைத்தாலே விலை குறைந்து விடும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளே தெரிவித்து விட்டனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் கடந்த ஆண்டு ஜூலையில் 20 டாலருக்கு கீழ் வந்தபோதும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. ஒரே மாதிரியான நிலையை சந்தையில் வைத்திருக்க முடிவு செய்தன.
அதனால் பெட்ரோல், டீசல் மீதான விலையின் பலன்களை மத்திய, மாநில அரசுகளே அனுபவித்து வந்தன. அரசுக்கு நேரடி வரி வருவாய் மற்றும் மறைமுக வரி வருவாய் என இரண்டு வகையாக வசூல் மழை கொட்டுகிறது. இவற்றில் சாதாரண, நடுத்தர மக்கள் செலுத்தும் மறைமுக வரியை குறைவாகவும், நேர்முக வரியை பெருநிறுவனங்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கு அதிகமாகவும் விதிக்க வேண்டும். ஆனால், கடந்த 2020ல் பெருநிறுவனங்கள் என்று சொல்லப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 36 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்தனர். இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு கடுமையான வரியை விதித்துள்ளனர். மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசுகளும் இந்த வரியை உயர்த்தியுள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் ஏறக்குறைய 50 சதவீதத்துக்கு மேல் வரிகளே ஆக்கிரமித்து விடுகின்றன.
மாநில அரசுகளுக்கு விற்பனை வரி, கலால் வரி, சொத்து வரி ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியில் மாநில அரசுகளின் வரிகள் சேர்ந்து விட்டன. இதனால் ஏற்படும் இழப்பை மத்திய அரசிடம் இருந்துதான் பெற வேண்டும். இருப்பினும் இதை ஈடுகட்டவும், வரி வருவாய் குறைவதை விரும்பாத மாநில அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு முன்வருவதே இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் 11 முறை கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதுதான் வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது.
அப்போது பெட்ரோலின் அடக்கவில்லை ரூ.48 என்றும் கலால் வரி ரூ.24 எனவும் இருந்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72க்கு விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஏறக்குறைய பாதியாக குறைந்தும், அதே விலையில்தான் இப்போதும் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்றாலும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. காரணம் வருவாய்தான். அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் மூலம் வரும் வரி வருவாய், வற்றாத அமுத சுரபியாக மத்திய, மாநில அரசுகளின் கஜானாவில் பணமழையாக கொட்டுகிறது. கடந்த 2014-15 நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1,72,065 கோடியாக இருந்தது. இது ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் மட்டும் 3,34,315 கோடி மத்திய அரசுக்கு வசூலாகியுள்ளது.
இதில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, டிவிடெட் உள்ளிட்டவை அடங்கும். கடந்த 2014-15 முதல் 2019-20 நிதியாண்டு வரை மத்திய அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.17,80,056 கோடி. இதே காலக்கட்டத்தில் மாநில அரசுகளுக்கு கிடைத்த மொத்த வருவாய் ரூ.11,66,043 கோடி. இதில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.87,708 கோடி. தற்போதைய நிலவரப்படி பெட்ரோலின் அடக்கவிலை என்பது ரூ.31. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91க்கு விற்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கலால் வரியை விதித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.44க்கு விற்க முடியும்.
அதேபோல கலால் வரிக்கு பதிலாக ஜிஎஸ்டியை விதித்தால் ரூ.38க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்க முடியும். ஆனால் மத்திய மாநில அரசுகள், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர விரும்பவில்லை என நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான அடிப்படை விலை 66 சதவீதமாகவும் மற்றவை வரியாகவும் இருந்தது. தற்போது அடிப்படை விலை 34 சதவீதமாகவும் எஞ்சிய 66 சதவீதம் வரிகள் மற்றும் டீலர் கமிஷனாக உள்ளது.
தமிழக அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டு முதல் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியாக ரூ.87 ஆயிரம் கோடிக்கு மேல் ஈட்டியுள்ளது. இதுதவிர, நடப்பு அரையாண்டில் ரூ.6,892 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு வரி கிடைத்தும், தமிழக அரசோ,மத்திய அரசோ மக்களுக்கு நேரடி பலன் அளிக்கும் வகையில் எதுவுமே செய்ததாக தெரியவில்லை. கஜானா நிரம்பும் அளவுக்கு இவ்வளவு பணம் வரி மழையாக கொட்டியிருக்க, நிதியே இல்லை என மத்திய அரசும், கடன்தான் மிச்சம் என மாநில அரசும் கைவிரிக்கின்றன.
அப்படியென்றால் இந்த வரிப்பணமெல்லாம் எங்கே போனது என்பது, விடை தெரியாமல் விழிக்கும் சாமானியனின் கேள்வி. ஒவ்வொரு முறை அரசுக்கு வரி ஏற்றம்மூலம் வருவாய் கிடைக்கும்போதெல்லாம், நடுத்தர மக்கள் தலையில்தான் அந்த சுமை பேரிடியாக விழுகிறது. ஆனால், அவர்கள் இன்று வாழ்வாதாரம், வருமானம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, சிறுகச்சிறுக சேமித்து வரும் உண்டியல் பணத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியும் வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. இதனால் சரக்கு போக்குவரத்து வாடகை, காய்கறி, மளிகை விலை என நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட் பல மடங்காக உயர்ந்து விட்டது. இதில் இருந்து வீழும் வழியே தெரியவில்லை என அப்பாவி மக்கள் கண் கலங்குகின்றனர்.
வரி விதிப்புக்கு வழிகாட்டிய மத்திய அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் குறைந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம், ஒரு லிட்டர் டீசலுக்கு ₹13, பெட்ரோலுக்கு ₹10 என கலால் வரியை உயர்த்தி, மற்றவர்களுக்கும் வழிகாட்டியது மத்திய அரசு. இது விற்பனை விலையில் எதிரொலிக்கவில்லை என்றாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்து விட்டது.
இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2.25 லட்சம் கோடி கிடைக்கும் என கணிக்கப்பட்டது. மத்திய அரசின் வழியை பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது. டெல்லி, அசாம், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தின.
அத்தியாவசிய துறைகள்அத்தனையும் பாதிப்பு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோதுதான் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் வரியை உயர்த்தியதால், சென்னையில் கடந்த மே 4ம் தேதி பெட்ரோல் ரூ.3.26 உயர்ந்து ரூ. 75.54 ஆகவும், டீசல் ரூ.2.51 உயர்ந்து ரூ.68.22 ஆகவும் அதிகரித்தது. இப்படி வரி மேல் வரி போட்டு மத்திய, மாநில அரசுகள் வசூல் வேட்டை ஆடியதால், பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து சரக்கு போக்குவரத்து, விவசாயம், வாகன விற்பனை, சுற்றுலா துறை என வரிசையாக அத்தனை துறைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
வரி விதிப்பில் மட்டும் உலக நாடுகளை மிஞ்சிய ‘வளர்ச்சி’ மற்ற நாடுகளை போல வரி தீவிரவாதம் இந்தியாவில் இல்லை என மத்திய அரசு அவ்வப்போது கூறி வருகிறது. ஆனால், மக்களை வாட்டி வதைக்கும் அளவுக்கு வரி விதிப்பதில் உலக நாடுகளையே இந்தியா மிஞ்சி விட்டது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரியில் பெட்ரோல் விலை சீனாவில் 1.4%, இங்கிலாந்தில் 1.8%, பிரேசிலில் 20.6 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை 13.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
- நன்றி தினகரன்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!