Tamilnadu
“கொரோனா சிகிச்சைக்கு HIV PPE கிட் வழங்கிய அதிமுக; ஊழல் துறையான சுகாதாரத் துறை” - டாக்டர்கள் சங்கம் சாடல்!
தமிழக அரசு தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையில் மக்கள் நலனுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றாமல், ஊழல் முறைகேடுகள் வாயிலாக இந்தத் துறையை ஊழல் துறையாக மாற்றியுள்ளனர். அது பணி நியமனமாக இருந்தாலும் சரி, கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் சரி. இப்படி பல்வேறு விஷயங்களை பார்க்கிறோம். கொரோனா காலத்தில் மருத்துவர்கள் பணி நியமனங்களை அவுட்சோர்சிங் மூலமாக நியமிப்பதாக கூறினார்கள்.
அந்த அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்படுபவர்களிடம் தனியார் ஏஜென்சி 2 மாதச் சம்பளத்தைக் கேட்டனர். அது ஆடியோவாகவே வெளியானது. இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பணி நியமனம் செய்தனர். மருத்துவர் பணி நியமனம் இல்லாமல் லேப் டெக்னீஷியன், பிசியோதெரபிஸ்ட் இந்த மாதிரி பல்வேறு மருத்துவப் பணியாளர் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நியமிக்க முயற்சி செய்தார்கள்.
இதில், பலர் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். இவ்வாறு பணத்தைக் கொடுத்து சேர்ந்தவர்கள் தங்களை நிரந்தரப்படுத்துவார்கள் என்று சேர்ந்தனர். ஆனால், அவர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசுக்குத் தேவையான ஏஜென்சி மூலம் இந்த மாதிரி பணி நியமனம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட டாக்டர், செவிலியர் உட்பட மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம் தருவதாக கூறினார்கள். அதேபோன்று கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் தருவதாக கூறினார்கள்.
ஆனால், அதனை வழங்கவில்லை. அதே நேரத்தில், இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக நிவாரணத் தொகையை குறைத்தனர். அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒரு மாதம் சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் என்று கூறினார்கள். அதையும் வழங்கவில்லை. மருத்துவத் துறைப் பணியாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல கட்டங்களாகப் போராடி வருகின்றனர். அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு இடமாறுதல்’, ஆகியவற்றை கவுன்சிலிங் மூலமாக நிறைவேற்றுவதாக கூறினார்கள். ஆனால், தற்போது வரை நிறைவேற்றவில்லை. ஆனால், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை இடமாறுதல் செய்து பழிவாங்கியுள்ளனர். இது, மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், விரைவில் இனிப்புச் செய்தி வரும் என்று கூறினார். ஆனால், ஒரு இனிப்புச் செய்தியும் வரவில்லை. ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றவில்லை. அரசு அனுமதித்த திட்டத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது.
கொரோனா தொற்றின்போது மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பி.பி.இ. கிட் (பாதுகாப்பு கவசம்) இல்லை. ஆனால், அமைச்சர், "தமிழக அரசிடம் போதிய பாதுகாப்புக் கவசம் உள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் கேட்டால் கூட பி.பி.இ. கிட் தருவோம்" என்று கூறினார். ஆனால், கடைசியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் உடையை தான் (எச்.ஐ.வி.கிட்) சுகாதாரத்துறையிடம் இருந்தது. அதைத் தான் அமைச்சர் பி.பி.இ. கிட் இருப்பதாக தவறான தகவல்களை பதிவு செய்தார். கொரோனா சிகிச்சையின் போது அந்த கிட்டை நமது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அணிந்து கொண்டனர். இதனால், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், எங்களிடம் பி.பி.இ. கிட் உள்ளது என்று தொடர்ந்து அமைச்சர் கூறி வருகிறார்.
கொரோனா காலத்தில் இந்த அரசு திறம்பட செயல்படவில்லை. அரசியல் நோக்கத்துடன் தான் இந்த அரசு செயல்பட்டது. ஊழல், முறைகேடு ஒரு புறம் இருந்தால் கூட இந்த அரசு மக்களை ஏமாற்றி திறம்பட செயல்படாமல் இருந்ததால் பொருளாதார இழப்பு, ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது. நீட்டில் இருந்து நிரந்த விலக்கு வாங்குவதாக கூறினார்கள். ஆனால், இப்போது வரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவக் கல்வியில் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் போதிய மருத்துவமனைகள் இல்லை.
இதனால், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் மருத்துவமனைகள் இல்லாமல் தவித்தனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாத நிலையில், அங்கு அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கொரோனா பாதித்த பலர் சிகிச்சை இல்லாமலேயே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளிக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதில், டாக்டர்களை அவுட்சோர்சிங்கில் நியமித்தனர். இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க தடை விதிக்கப்பட்டன. செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கின்றனர். இந்த மினி கிளினிக்குகள் அவசர, அவசரமாக கட்டப்பட்டதால் பல இடங்களில் கட்டிடம் திறந்தவுடன் இடிந்து விழுகிறது. சொந்தமாக கட்டிடங்கள் உருவாக்க வேண்டும்.
ஆனால், பல இடங்களில் பழைய கட்டிடங்களையும், இ சேவை மையங்களையும் மினி கிளினிக்குகளாக மாற்றியுள்ளனர். தற்காலிகமாகத் தான் மினி கிளினிக்குகள் அமைத்துள்ளனர். இது தேர்தலில் வாக்கைப் பெற்று வெற்றி பெறுவதற்காகத்தான். உண்மையாக மக்கள் நலனுக்காக இந்த மினி கிளினிக்குகள் அமைக்கப்படவில்லை. இங்கு வேலை செய்பவர்களை 10 மணிநேரம் பணி அமர்த்துகின்றனர். இது தொழிலாளர் விரோதப் போக்கு. எந்த வசதியும் அவர்களுக்கு கிடையாது. அவர்களை எப்படி 10 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். மினி கிளினிக்குகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான். ஆனால், தங்களது மூளையில் உதித்து இந்த திட்டத்தை செயல்படுத்தியது போன்று பேசி வருகின்றனர். மருத்துவமனைகளில் செலவு செய்யத் தயங்குகின்றனர்.
ஆனால், இந்த அரசு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்கத் தயக்கம் காட்டுகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை, நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை. தரமான மருத்துவ உபகரணங்கள் கருவி வாங்க ஓபன் டெண்டர் விட வேண்டும். மேலும், நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும். பல மருத்துவமனைகளில் கருவிகள் செயல்படாமல் போய் விடுகிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இந்த அரசு வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கவில்லை.
சமீபத்தில் கூட கொரோனா பரிசோதனை செய்ய ரேபிட் கிட் கருவி சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டன. அங்கு ஒரு கருவி ரூ.250 என்ற நிலையில் ரூ.900க்கு வாங்க முயற்சி செய்தனர். டெல்லி உயர் நீதிமன்றம் கூட இதைக் கண்டித்தது. அதன் பிறகு முழுமையாக ரத்து செய்தனர். கொரோனா காலத்தில் கூட ஊழல் முறைகேடு நடந்துள்ளது. மருத்துவத்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களை அதிகமானோரை நியமிக்க வேண்டும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மினி கிளினிக், 15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அப்போது, தான் மக்களை மேம்படுத்த முடியும். ஏராளமான டாக்டர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். அந்த மாதிரி வேலையில்லாமல் இருப்பவர்களை காலியான இடங்களில் பணியமர்த்தும் பட்சத்தில் மக்களுக்கு தரமான மற்றும் உடனடி மருத்துவ சேவை கிடைக்க ஏதுவாக இருக்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!