Tamilnadu
தந்தையின் மூடநம்பிக்கையால் விளைந்த வினை : ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
ராமநாதபுரம் மாவட்டம், கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி கவிதா சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு கோபிநாத் என்ற மகனும், தாரணி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வீரசெல்வம் வீட்டில் வளர்த்து வந்த ஆடு, மாடு, நாய்கள் அடுத்தடுத்து இறந்துள்ளன. இதற்கு இறந்துபோன மனைவி கவிதாவின் ஆவிதான் காரணம் என சிலர் வீரசெல்வத்திடம் கூறியுள்ளனர். இதை வீரசெல்வம் நம்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மகள் தாரணிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தாரணி அடிக்கடி, கவிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று வந்ததால்தான், மகள் மீது கவிதாவின் ஆவி புகுந்துவிட்டது. இதனால் தான் தாரணிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என நம்பியிருக்கிறார் வீரசெல்வம்.
இதனால் தாரணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், திருப்பாலைக்குடி அருகே உள்ள போய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போதும் தாரணியின் காய்ச்சல் குறையவில்லை. இதனையடுத்து வாணி என்ற கிராமத்தில் உள்ள பேய் ஓட்டும் பெண் பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பெண் சாமியார் தாரணியை சாட்டையாலும், குச்சியாலும் பலமாக அடித்துள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் தாரணி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், தாரணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர்.
ஆனால், வீரசெல்வம் காய்ச்சலுக்கான சிகிச்சையைத் தொடராமல், மீண்டும் தாரணியைப் பேய் ஓட்டுபவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தார். அன்று இரவே தாரணிக்குக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. பிறகு மீண்டும் அவரை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையனர் வழக்குப் பதிவு செய்து, பேய் ஓட்டி சாமியார்களிடமும், வீரசெல்வத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!