Tamilnadu

பெட்ரோலுக்கு நிகராக உயரும் டீசல் விலை.. கார்ப்பரேட்டுகளுக்காக சாமானியர்களை சக்கையாக பிழியும் மோடி அரசு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், கடந்த ஆண்டு மே மாதம் வரை கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூன் 2020 முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகின்றன.

அவ்வகையில், கடந்த 8 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சதம் அடித்துள்ளது பெட்ரோல் விலை. அதேபோல தமிழகத்திலும் 90 ரூபாயை தாண்டியுள்ளது பெட்ரோல் விலை. அது போக, பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்து வருகிறது.

Also Read: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் ரூ.20 லட்சம் கோடியை ஈட்டிய மத்திய பாஜக அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்நிலையில், சென்னையில் நேற்றைய நிலவரப்படி 91.62 ரூபாய் என விற்பனை ஆன பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து இன்று 91.92 ரூபாய் என விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்று 84.86 ரூபாய் விற்பனை ஆன நிலையில், 40 காசுகள் அதிகரித்து 85.26 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இவ்வாறு தினந்தோறும் உயரும் பெட்ரோல் டீசல் விலையால் நடுத்தர மக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ’சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலை 40 ரூபாய் தான்’: மோடி அரசின் நடவடிக்கையை முட்டாள்தனம் என சொல்லும் சு.சாமி