Tamilnadu
“அது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல; வெற்று நடைபோடும் தமிழகம்” : மு.க.ஸ்டாலின் சாடல் !
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “நியூஸ்-18 தமிழ்நாடு” செய்திகள் தொலைக்காட்சிக்கு, அளித்திருந்த சிறப்பு நேர்காணல் நேற்று மாலை ஒளிபரப்பானது. அந்நேர்காணலில், `நியூஸ்-18’ “அரசியல் பிரிவு” செய்தி ஆசிரியர் பா.தமிழரசன் தொடுத்த பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “எந்தக்கட்சியின் பிளவையும் பயன்படுத்தி நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அத்தகைய சூழ்நிலையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும் கழகத் தலைவர் அவர்கள், “தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்ப்பதை விட, தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்தார். `நியூஸ் 18’ தொலைக்காட்சிக்காக சிறப்பு நேர்காணல் கண்ட பா.தமிழரசனின் முகப்புரையும், அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்களின் நேர்காணலும் வருமாறு:-
“நியூஸ் 18” தமிழ்நாடு தொலைக்காட்சியின் சிறப்பு நேர்காணலுக்காக நம்மோடு இணைந்திருக்கும் அரசியல் ஆளுமை, தமிழக அரசியலின் முதன்மை முகங்களில் ஒன்றான தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
செய்தியாளர் : “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரையை தீவிரமாக களமாடி கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பயணத்திற்கு மக்களிடத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. ஆளுங்கட்சியினரும் கலந்து கொள்ள ஆவல்!
கழகத் தலைவர் : மிகச் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அந்தந்த தொகுதியில் இருக்கும் மக்கள் வந்து நேரடியாக கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் வந்து கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், அதனை நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சி மூலமாக என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுத் தரப்பில் உளவுத்துறை மூலமாக அவர்களும் கண்காணித்துக் கொண்டு, அதில் மக்கள் என்ன கோரிக்கை சொல்கிறார்களோ, அந்த கோரிக்கைகளைக் கூட அவர்கள் நிறைவேற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டம் வெற்றியாகச் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கப் பணம் விரயமாக்கப்படுகிறது
செய்தியாளர்: அப்படியே உங்கள் எதிர் முகம் “வெற்றி நடை போடும் தமிழகம்” அந்த பரப்புரை பயணத்தை முதலமைச்சர் - அ.தி.மு.க. தலைவர்கள் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்கள் எல்லாம் கவனிக்கிறீர்களா?
மு.க.ஸ்டாலின்: செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுகிறேன். மற்றபடி அதிகநேரம் கிடைப்பதில்லை. சொல்லிக் கேள்விப்படுகிறேன். இன்றைக்கு அரசாங்கத்தின் பணம் எப்படி எல்லாம் விரயம் ஆக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். “வெற்றி நடை போடும் தமிழகம்“ என்பதற்குப் பதிலாக “வெற்று நடைபோடும் தமிழகம்" என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். அதாவது அரசாங்க பணத்தை - மக்களுடைய வரிப் பணத்தை எந்த அளவிற்கு பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலே எந்த ஆட்சியும் செய்யாத ஒரு அக்கிரமத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் பதில் சொல்லும் காலம் நிச்சயமாக வரும்.
முதலமைச்சரின் ஆத்திரத்தின் உச்சம்!
செய்தியாளர்: அந்த பரப்புரைப் பயணத்தில் தி.மு.க.வை முதலமைச்சர் குறிப்பாக, உங்களை, கடுமையாகக் தாக்கி விமர்சித்துப் பேசிக்கொண்டு வருகிறார். அதையெல்லாம் பார்க்கிறீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?
மு.க.ஸ்டாலின்: அரசியலில் விமர்சனத்தை ஜனநாயக அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்போகிறோம். ஆத்திரத்தின் உச்சத்திற்கு, உச்சாணிக்கு சென்று, எதை பேசுகிறோம் என்று தெரியாமல் முதலமைச்சர் என்பதை மறந்து பேசுவதைப் பார்க்கும்போது உள்ளபடியே வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். அவருக்காக அல்ல, அந்த முதலமைச்சர் பதவிக்காக, உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்காரங்கள்! ரவுடித்தனங்கள்!
செய்தியாளர்: பிரதானமாக ஊழல், வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை செல்லும் இடமெல்லாம் அவர் முன்வைக்கிறார். அதற்கான பதிலை பல தளங்களில் கொடுத்திருக்கிறீர்கள். அதையும் தாண்டி ஒரு விஷயத்தை எல்லா இடங்களிலும் அவர் பதிவு செய்கிறார். தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும். பெண்கள் சாலைகளில் நடக்க முடியாத அளவிற்கான ஒரு நிலைமையும் உருவாகும் என்று கடுமையான விமர்சனங்களை அவர் செல்லுமிடமெல்லாம் பேசிக் கொண்டுவருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்று பிரதானமாக முன்வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின் : திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நடந்திருக்கலாம். அது அவ்வப்போது கண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால். இப்போது இருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் எப்படி சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிறது, மோசமான நிலைக்கு போய்விட்டது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரே ஒரு உதாரணம், பொள்ளாச்சி. அந்த பொள்ளாச்சியில் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் பதவியில் இருப்பவர்கள், அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள், அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பல்வேறு ஊடகங்களில், பத்திரிக்கைகளில், சமூக வலைதளங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. அதற்கு இதுவரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்? இப்போது தான் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் சி.பி.ஐ.
மூலமாக கைது செய்யப்பட்ட செய்திவந்திருக்கிறது. அந்த செய்தி வந்து கட்சியிலிருந்து விலக்கி இருக்கிறார்களே தவிர, அ.தி.மு.க. ஆட்சியில்தான் “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக“பாலியல் பலாத்காரம், ரவுடித்தனங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போகும் நிலைமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. அதை மூடி மறைப்பதற் காக திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் அல்ல.
செய்தியாளர்: 100 நாட்களில் தீர்வு என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து இருக்கிறீர்கள். ஆனால் இது ஒரு ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் குற்றம் சுமத்துகிறார். நீங்கள் அதற்கு ‘நானே நேரடியாக ஒரு தனித்துறை அமைத்து, அதில் கண்காணித்து தீர்வு காண்பதற்கான முயற்சி மேற்கொள்வேன்’ என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இதெல்லாம் ஒரு கண்துடைப்பு என்று எதிர்த்தரப்பு ஒரு பார்வையாக முன்வைக்கிறார்களே?
மு.க.ஸ்டாலின்: 10 வருடங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஏமாற்றமாகதான் தெரியும். ஏனென்றால் 100 நாட்களில் தீர்வு காண்பது என்பது 10 வருடங்களாக எந்த அடிப்படை பிரச்சினைகளையும் அதாவது குடிநீர், சாலை வசதி, பேருந்துவசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பட்டா பிரச்சினை, முதியோர் உதவித் தொகை இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகளான மக்களுடைய அன்றாட பிரச்சினைகளை கூட இந்த ஆட்சி தீர்த்து வைக்கவில்லை. இதை என்ன என்று கூட கேட்டுக் கொள்ளவில்லை. அதுவுமில்லாமல் ‘முதலமைச்சர் செல்‘ என்று ஒன்று இருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், மக்கள் குறைகளை கேட்பதற்காக ஒருநாள் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் நடக்கிறதா? நடந்து என்ன பயன்? அதில் மக்களுக்கு என்ன பயன்? எதுவுமே இல்லை. வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறார்கள்!
செய்தியாளர்: ஒன்பதரை லட்சம் மனுக்களில் ஐந்து லட்சம் மனுக்களுக்கு நான் தீர்வு கண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் சொல்லுகிறார்.
மு.க.ஸ்டாலின்: அவர் வாய்கிழிய சொல்லுவார். ஆனால் இதுவரைக்கும் வெளிப்படையாக ஆதாரத்துடன் சொல்லவில்லை. இவ்வளவு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு தொழிற்சாலைகள் வந்திருக்கிறது. இவ்வளவு முதலீடு வந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். வெள்ளை அறிக்கைவிடுங்கள் என்று எத்தனையோமுறை கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதுவரைக்கும் அவர்கள் விடவில்லை.
அதேபோலதான் இதுவும். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினோம். அப்போதே அந்த ஊராட்சியில் இருக்கும் மக்கள் அவர்கள் குறைகளைச் சொன்னார்கள். அதை நாங்கள் குறித்துக் கொண்டு, மனுக்களை வாங்கி வைத்துக்கொண்டு அந்தந்ததுறை அதிகாரிகளிடம், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப்பிறகு இப்போது கிராம சபை கூட்டம் என்று அறிவித்தோம்.
இந்த தேர்தலை ஒட்டி, ஆனால் கிராமசபை கூட்டத்தை நடத்தக் கூடாது என்றார்கள். தமிழ்நாடு அரசாங்கத்தை பொறுத்தவரை கிராம சபை கூட்டம் என்பது ஒரு வருடத்திற்கு 4 முறை நடத்த வேண்டும் என்று மரபு இருக்கிறது. இதுவரைக்கும் இந்த ஆட்சியில் நடத்தவே இல்லை. அதனால் நாங்கள் இதை நடத்த வேண்டும் என்ற முடிவெடுத்தோம். அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏன் என்றால் கிராமசபை கூட்டத்தில் மக்கள், முதல் நாள் நிகழ்ச்சியிலே பழனிச்சாமியிலிருந்து அமைச்சர்கள் வரைக்கும் செய்து கொண்டிருக்கும் ஊழல்களை ஆதாரங்களோடு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தந்த ஊர் பகுதிகளில் இருக்கும் ஆளுங்கட்சியினர் செய்யும் அட்டூழியங்களை அவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் அதை தடை செய்யவேண்டும். கிராம சபை கூட்டத்தை தனிப்பட்டவர்கள் நடத்தக்கூடாது. அரசாங்கம்தான் நடத்த வேண்டும் என்று பழனிச்சாமி ஒரு ஆர்டர்போட்டார். கிராம சபை கூட்டத்தைதானே நடத்தக் கூடாது என்று சொல்கிறீர்கள், நாங்கள் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லி மக்கள் கிராம சபை கூட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறோம் அதேபோலத்தான் இப்போதும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“ என்கின்ற தலைப்பில் இன்றைக்கு அந்த தொகுதியில் இருக்கும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று அங்கு இருக்கும் சட்டமன்ற தொகுதிமக்களை வரவழைத்து அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் என்ன? என்று, அதையெல்லாம் குறைகள் என்ன? அதெல்லாம் கேட்டு, அதெல்லாம் அந்த 100 நாட்களில் எப்படியும் தீர்க்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து திட்டமிட்டு அதற்கென்று ஒரு தனித்துறை அமைத்து தனி அதிகாரிகள் அமைத்து அந்த வேலைகளைதான் அவர்கள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இந்தத்திட்டத்தை அறிவித்திருக்றோம்.
செய்தியாளர்: அது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சாத்தியப்படுத்திவிடுவீர்களா?
மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
செய்தியாளர்: கூட்டணியை பொருத்தவரையில் ஒரு பார்வையை முன்வைக்கிறார்கள். கலைஞர் அவர்கள் காட்டிய அணுகுமுறையை மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்டுவாரா என்பது சந்தேகமே என்று சொல்லுகிறார்கள். அப்படித்தானா?
மு.க.ஸ்டாலின்: கலைஞர் காலத்தில் கட்சி கூட்டணி என்பது வேறு. இப்போது இருக்கும் கூட்டணிகள் வேறு. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து ஒரு பெரிய கூட்டணியை நாங்கள் முழுவதுமாக பயணித்து அழைத்து வந்திருக்கிறோம். அதனால் எல்லோருக்கும் தொகுதி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் ஒரு கட்சியை பொறுத்தவரையில் அதிகமாக கேட்பதுதான் உரிமை. அது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் இருப்பதை பகிர்ந்து நிச்சயமாக கொடுப்போம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் கலைஞர் என்ன விதிமுறைகளை கடைபிடித்தாரோ அதேபோல விதிமுறைகளைநானும் கடைபிடிப்பதில் எந்தவிதமாற்றமும் இல்லை. புதிய கூட்டணி பற்றி சிந்திக்கவுமில்லை அவசியமுமில்லை
செய்தியாளர்: பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வருவதில் உங்களுக்கு எதுவும் தயக்கம், நெருக்கடிகள் இருக்கிறதா?
மு.க.ஸ்டாலின்: நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். நெருக்கடியும் இல்லை. தயக்கமும் இல்லை. இப்போது இருக்கும் கூட்டணியிலேயே பயணிப்பதாக முடிவெடுத்திருக்கிறேன். புதிதாக கூட்டணியைப் பற்றி சிந்திக்கவில்லை. யாரும் இது வரைக்கும் எங்களிடம் கேட்கவும் இல்லை. நாங்களும் அவர்களிடம் கேட்கவில்லை. அது அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. அதனால் அந்த பிரச்சினைக்கு இடமில்லை.
செய்தியாளர்: செல்வி.ஜெயலலிதா அவர்களோடு ஒரு நேரடி அரசியல் ஒரு தீவிரகளமாடும் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று நினைப்பு இருக்கிறதா?
மு.க.ஸ்டாலின்: நான் பலமுறை நேரடியாக எதிர்த்து பேசியிருக்கிறேன். சட்டமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. அவர்கள் என்னைப் பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த யோக்கியதையும் இல்லை. அருகதையும் இல்லை என்று ஒரு வார்த்தை சொன்னார்கள். அதை சொல்வதற்கு உங்களுக்கு அருகதை இல்லை என்று நான் பேசியிருக்கிறேன். இவ்வளவு தூரம் பேசியிருக்கிறோம்.
அரசியல் ரீதியாக பேசியிருக்கிறேன். அது வேறு. தலைவர் கலைஞர் அவர்கள் சுனாமி பேரிடர் வந்தபோது எழுதிய திரைப்படத்தில் வந்த பணத்தைக் கொண்டுசென்று கொடுத்து விட்டு வரச்சொன்னார். நான்தான் கொடுத்துவிட்டு வந்தேன். அது வேறு. ஜெயலலிதா அவர்கள் இறந்தது வருத்தம் அளிக்கக்கூடியதாகவே உள்ளது. உள்ளபடியே வருத்தமளிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. சசிகலா பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
செய்தியாளர்: திருமதி.சசிகலா அவர்களுடைய வருகையில், ‘நடக்க வேண்டியது நடக்கும்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால் திருமதி.சசிகலா அவர்கள் போர்க்கொடி தூக்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், சமாதானக் கொடியை தூக்குவதான விஷயங்கள் தான் நமக்கு தெரிகிறது.
மு.க.ஸ்டாலின்: அது உங்களுடைய வியூகங்கள். பொதுவாக வந்திருக்கிறார்கள். என்ன நடக்க போகிறது என்று அ.தி.மு.க.காரர்கள்தான் கவலைப்பட வேண்டும். அதைபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதனால் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.
செய்தியாளர்: சில அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கிறார்கள். 1989 அ.தி.மு.க. 2 அணியாக இருந்தது போல இன்றைக்கும் 2 அணியாக இருக்கும். அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தார்கள். அதேமாதிரியான ஒரு எண்ணத்தில் ஒரு உக்தியில் தி.மு.க. இருக்கிறது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மு.க.ஸ்டாலின்: யாருடைய பிளவையும் பயன்படுத்தி, அதை ஆதாயமாக வைத்து தி.மு.க. வர வேண்டிய அவசியமும் இல்லை. அந்தத் தேவையும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை. அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் தனித்தே இப்போது இருக்கும் பலத்தை வைத்துக்கொண்டே நிச்சயமாக வரும். அதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!