Tamilnadu
புதுக்கோட்டையின் பி.டி.உஷா.. தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் தங்க மங்கை ‘டீ மாஸ்டர்’ கலைமணி!
விளையாட்டில் பெண்களுக்கு வயதும், திருமணமும் தடையில்லை என உலக அளவில் செரினா வில்லியம்ஸ், மேரிகோம் என பலர் நிரூபித்து இருக்கிறார்கள். ஏன் உலக அளவில், உள்ளூர் அளவிலேயே நான் இருக்கிறேன் என 45 வயதிலும் தடகளம், மாரத்தான் போட்டிகளில் பதக்கங்களை குவித்து சாதித்து வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலைமணி.
புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தவர் கலைமணி. பள்ளி படிக்கும் போதே கபடி மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் விளையாட்டின் மீது இவருக்கு ஆர்வம் வந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பு பாதியில் நிற்க, தடகள விளையாட்டில் இவர் கொண்டிருந்த கனவும் கலைந்துவிடுகிறது.
பின்னர் அழகு என்பவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார். இவர்களுக்கு பிரபு, பிரபாகரன் என்ற மகன்களும், பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள். குடும்ப வாழ்வில் கலைமணி ஈடுபட்டு வந்தாலும், தடகளத்தில் சிறந்த வீராங்கனையாக வரவேண்டும் என்ற அவரின் வேட்டை குறையவில்லை.
திருமணத்தின் போதே கணவரிடம், தன் தடகள ஆர்வத்தைச் சொல்லியிருக்கிறார். கலைமணியின் குடும்பம் வறுமையில் இருந்ததால், இவரின் மனது தடகளத்தின் பக்கம் செல்லாமல், கணவர் நடத்தும் கடையில், டீ மாஸ்ட்ராக பணியை துவக்கினார். இப்படியே 15 வருடங்கள் கலைமணிக்கு கடந்துவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு பேப்பர் ஒன்றில், மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. இதை பார்த்த கணவர் அழகு, கலைமணியிடம் இதில் 'நீ கலந்து கொள்ளலாமே?` என கேட்டுள்ளார். கணவர் இப்படி சொன்னதும் இளம் வயதில் தடகளத்தின் மீது கொண்ட காதல் மீண்டும் கலைமணிக்கு பூக்கத் தொடங்கியது. எனினும் தடகளப் பயிற்சி பெற்றுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதே? பழைய படி ஓட முடியுமா? என்ற கேள்விகளும் இவர் மனதில் எழுந்துள்ளது. மேலும் கணவரால் குழந்தைகளையும், டீ கடையையும் பார்த்துக் கொள்ள முடியுமா என்ற தயக்கம் இருந்துள்ளது. பின்னர் இந்த கேள்விகளையும், தயக்கத்தை உடைத்துக் கொண்டு தடகள பயிற்சியில் களம் இறங்கினார் கலைமணி.
பின்னர் கலைமணி 400, 800 மீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். இந்தப் பயிற்சி, புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் 1500 ,3000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வாங்கி கொடுத்தது. அப்போது பதக்கம் வழங்கிய விளையாட்டு அதிகாரி, ' நீ பி.டி. உஷா மாதிரி ஓடுகிறாய். நிச்சயம் தடகளத்தில் சாதிப்பாய். முயற்சியை மட்டும் கைவிடாதே' என்ற இவரின் வார்த்தை கலைமணிக்கு 'பூஸ்ட்டாக' அமைந்தது.
2014 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றும் சூழ்நிலை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. கோவையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். கோவையில் மாநில அளவில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் 5.17 மணி நேரத்தில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். மேலும் அதே ஆண்டு கரூரில் நடைபெற்ற 800,1500,5000 மீட்டர் தூரப் போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
கலைமணி அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலை உணவு சமைத்துவிட்டு, 5 மணிக்குக் கணவரை டீ கடையில் விட்டுவிட்டு, பிறகு பயிற்சிக்குச் செல்கிறார். தினமும் 21 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறார். பின்னர் டீ கடைக்குச் சென்று டீ மாஸ்டராக தன் பணியைத் துவக்குகிறார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 41 கிலோ மீட்டர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கலைமணியின் இந்த விடா முயற்சியே அவரை மாவட்ட, மாநில அளவிலான தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதிக்க முடிந்திருக்கிற்து.
கலைமணி மாரத்தான் போட்டியில் பதக்கங்களை குவித்தாலும் வறுமை என்னும் 'கழுகு' அவரை மேலே பறக்க விடாமல் தடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அரசும் விளையாட்டுத் துறையில் சரியான கவனத்தைச் செலுத்தாததால் கலைமணி போன்ற லட்சம் பேரின் சாதனைகள் யாருக்கும் தெரியாமலே இருந்து விடுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!