Tamilnadu

கவுன்சிலிங் கடிதம் அனுப்பாமலேயே, மருத்துவ சீட்டை நிராகரித்ததாக கடிதம் : பட்டியலின மாணவி அதிர்ச்சி!

பட்டியலின மாணவிக்கு மருத்துவக் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பாமல், அவர் மருத்துவக் கல்லூரி இடத்தை நிராகரித்ததாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தவறான தகவல் அனுப்பியுள்ளதாக பேராசிரியர் கல்யாணி குற்றம்சாட்டியுள்ளார்.

சந்திரலேகா என்ற பட்டியலின மாணவி திண்டிவனம், ரோஷணையில் உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப்பள்ளியில் இலவசமாகப் படித்து, திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கடந்தாண்டு +2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சியில் கலந்துகொண்டு, நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற இவர், மாவட்ட அளவில் 10-வது இடத்திலும் மாநில அளவில் 271-வது இடத்திலும் உள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையில், அரசுப் பள்ளி மாணவர்கள் 6-வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை சுயநிதிப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவி சந்திரலேகா ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயின்ற சுயநிதிப் பள்ளியான தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்க இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. எனவே, இம்மாணவிக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உதவும்படி முதல்வரின் தனிப்பிரிவுக்கு மாணவியின் தாயார் மகேஸ்வரி கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம், மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து மாணவியின் தாயார் மகேஸ்வரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி கடந்த ஜனவரி 4-ம் தேதி மாணவி சந்திரலேகாவுக்குக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்தபோதிலும் அவ்விடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகிவிட்டார். எனவே, இவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் கல்யாணி, “இது உண்மைக்கு மாறான தகவல். மாணவி சந்திரலேகாவுக்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கடிதம் வரவில்லை. கலந்தாய்விலும் மாணவி சந்திரலேகா கலந்துகொள்ளவில்லை. ஆனால், மாணவி சந்திரலேகா கலந்தாய்வில் பங்கேற்றதாகவும், இருந்த 3 இடங்களையும் அவர் தேர்வு செய்யவில்லை என்ற தவறான தகவலை ஏன் அனுப்பியுள்ளார்கள் எனத் தெரியவில்லை. அப்படியெனில் இவருக்கான இடம் எங்கே போனது?

கலந்தாய்வுக்குக் கடிதம் அனுப்பாமல், கலந்தாய்வில் பங்கேற்காத மாணவியின் இடம் பறிக்கப்பட்டுள்ளது சமூக அநீதி. மாணவியின் இடம் பறிக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேட்டினை அரசு உடனடியாகக் கண்டறிந்து, மாணவி சந்திரலேகாவை மருத்துவக் கல்வியில் சேர்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காதை அறுத்து காதணி திருட்டு : அ.தி.மு.க-வினரால் புலம்பிய மூதாட்டி!