Tamilnadu
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு : தற்கொலைக்கு முயன்றதில் காதலன் உயிரிழப்பு - தீவிர சிகிச்சையில் காதலி!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கண்ணிமைக்கான்பட்டியைச் சேர்ந்தவர் அஜித். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பில் சேராமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அஜித்துக்கும் சிவரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
இருவரும் செல்போனில் பேசிக்கொண்டதோடு, அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிவரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக இருவரும் தமது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த சமயத்தில், சிவரஞ்சனியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி, காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது.
கல்லூரிக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சிவரஞ்சனி. பின்னர் அஜித்தும் சிவரஞ்சனியும் கரூர் மாவட்டம் கல்லுமடை அடுத்துள்ள கத்தாளப்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு கோவிலில் அஜித், சிவரஞ்சனிக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நம்முடைய திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனாம் நாம் தற்கொலை செய்துகொள்ளலாம்’ என இருவரும் முடிவெடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்த இருவரும் தாங்கள் கையில் கொண்டுவந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தினைக் குடித்துள்ளனர். இதில், அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிவரஞ்சனி உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் சிவரஞ்சனி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக வள்ளியணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிவரஞ்சனியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவரஞ்சனி சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் உயிரிழந்த அஜித்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காதல் ஜோடியின் இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துகொண்டதோடு, பெற்றோரின் எதிர்ப்பினால் இப்படி தற்கொலைக்கு முயன்று காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!