Tamilnadu

குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரம் : குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை தீவிரம்!

தஞ்சையில் பச்சிளம் குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையால் குரங்குகளை பிடிக்க 8 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு 25 குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில், வசிக்கும் ராஜா- புவனேஸ்வரி தம்பதியின் பிறந்து 8 நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 5க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று தூக்கிச் சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு பெண் குழந்தை அருகில் உள்ள அகழியில் விழுந்து பலியான சம்பவம் தஞ்சை நகர மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இது குறித்து அப்பகுதியில் அதிக அளவில் உள்ள குரங்குகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் அதிகாரிகளிடம் வலியுறுத்திய நிலையில், தற்போது பூமரத்தான் கோவில் தெருவில் குரங்குகளைப் பிடிக்க 8 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, குரங்குகளுக்கு பிடித்தமான வாழைப்பழம் போன்ற உணவு வைக்கப்பட்டது.

இதில் சுமார் 25 குரங்குகள் பிடிபட்டது. மேலும் பல குரங்குகள் அப்பகுதியில் சுற்றித் திரிவதால் வனத்துறையினர் மற்ற குரங்குகளை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வனத்துறையினர் தெரிவிக்கையில், இது போன்ற குரங்கு தொல்லைகள் மற்ற பகுதிகளில் இருந்தால் அப்பகுதி மக்களும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரியான இளையராஜா நேரில் பார்வையிட்டு பிடிபட்ட குரங்குகளை திருச்சி துறையூர் அருகே உள்ள பச்சை மலைப்பகுதியில் விடுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து வன விலங்கு ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஊருக்குள் குரங்குகள் வனப்பகுதியில் ஏற்படும் உணவுப் பற்றக்குறையே வரக்காரணம். எனவே குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு தேவையான உணவுகளை வனப்பகுதியில் ஏற்பாடு செய்துக்கொடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Also Read: பணம் பறிப்பதற்காக கடைகளை அகற்ற முயன்ற அதிமுகவினர், மாநகராட்சி ஊழியர்கள்: திநகர் வியாபாரிகள் குற்றச்சாட்டு